காஷ்மீர் விவகாரம் மற்றும் இந்திய குடியுரிமை சட்டம் தொடர்பாக  ஆலோசனை  நடத்த இஸ்லாமிய ஒத்திவைப்பு அமைப்பு நாடுகளின் கூட்டத்தைக் கூட்ட சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .  காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்ததுடன் அதை காஷ்மீர் ,  லடாக் எனது இரண்டு  மாகாணங்களாக இந்தியா அறிவித்துள்ளது . இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் சீனா உதவியுடன் ஐநா மன்றம் வரை கொண்டு சென்று சர்வதேச பிரச்சனையாக்க முயன்று அதில் தோல்வியடைந்துள்ளது.  

காஷ்மீர் விவகாரம் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டிய விவகாரம் என கூறி ஐநா ஒதுங்கிக்  கொண்டது.  எனவே இந்த விவகாரத்தில் சீனா பாகிஸ்தானுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது .  ஆனாலும் காஷ்மீர் விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் ,  காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசிக்க இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மாநாட்டைக் கூட்ட சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   இத்தகவலை அந்நாட்டின் வெளியுறவு மந்திரியும்  இளவரசருமான பைசல் பின்  பர்கான் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷியை நேரில் சந்தித்து தெரிவித்துள்ளார் .  அவர் ஒரு நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றிருந்த நிலையில் இது குறித்து பேசியதாக தெரிகிறது.

 

அச்சந்திப்பின்போது  காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது பற்றியும் ,  இந்தியாவின் புதிய குடியுரிமை சட்டம் ,  மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு , ஆகியவற்றைப்  பற்றியும் சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர் விவாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.  அப்போது மாநாடு நடத்தும் தகவலையும் தெரிவித்ததாக கூறப்படுகிறது .  இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் சுமார்  57 முஸ்லிம் நாடுகள் இடம்பெற்றுள்ளன.   இந்தியாவுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகளை அணி சேர்க்கும் முயற்சியில் பாகிஸ்தான் தீவிர முயற்ச்சிகளை மேற்கொண்டுவந்த நிலையில்  இந்த மாநாடு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது .