Ukraine - Russia Crisis: 4,300 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்... உக்ரைன் துணைபாதுகாப்பு அமைச்சர் தகவல்!!
ரஷ்யாவுடனான போரில் இதுவரை 4,300 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என உக்ரைனின் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுடனான போரில் இதுவரை 4,300 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என உக்ரைனின் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார் தெரிவித்துள்ளார். பல்வேறு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீது பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் போரை தொடர்ந்தார். ராணுவ வீரர்களுக்கு வலுசேர்க்கும் வகையில் உக்ரைன் பொதுமக்களும் துப்பாக்கி ஏந்தி ரஷ்ய வீரர்களின் போர் நடவடிக்கையை தடுத்து வருகின்றனர். உக்ரைனில் முறையான பயிற்சி இன்றி நாட்டை காக்க துப்பாக்கி ஏந்தியுள்ள பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் என அப்பாவிகளும் பலியாகி வருகின்றனர். மேலும் ரஷ்யாவின் போரை சமாளிக்க உக்ரைனுக்கு அமெரிக்கா உள்பட பல நாடுகள் ஆயுதங்கள், பண உதவிகள் செய்து வருகின்றன.
உக்ரைன் மீதான தாக்குதலைத் தொடங்கியது முதல் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. அதற்குப் பதிலடியாக சம்பந்தப்பட்ட நாடுகள் மீது ரஷ்ய அதிபர் புதினும் பல்வேறு தடைகளை அறிவித்து வருவதுடன் உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளார். உக்ரைனை நான்கு திசைகளில் இருந்தும் தாக்கும் ரஷ்ய ராணுவம், தற்போது ஏவுகணைகளையும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. எண்ணெய் கிடங்குகள், எரிவாயுக் குழாய்களை தகர்க்கும் ஏவுகணைகள், குடியிருப்புப் பகுதிகளையும் பதம் பார்த்து வருகின்றன. இது மிருகத்தனமான செயல் என்று குற்றம் சாட்டியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இது ரஷ்யா உக்ரைனில் நடத்தும் இனப்படுகொலை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
பல நாடுகளும் உக்ரைனுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் 3 குழந்தைகள் உள்பட 198 பேர் இறந்ததாகவும், 1000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருந்ததாகவும் உக்ரைன் அரசு கூறியிருந்தது. இந்நிலையில் நடைபெற்று வரும் போரில் இதுவரை 4,300 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி போரின் தொடக்கத்திலிருந்து இதுவரை சுமார் 4,300 ரஷிய வீரர்கள், 146 ராணுவ டாங்குகள், 27 விமானங்கள், 26 ஹெலிகாப்டர்கள் ஆகியவை ரஷ்யா இழந்துள்ளது என உக்ரைனின் துணை பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹன்னா மல்யார் தெரிவித்துள்ளார்.