ஒமைக்ரான் பீதியால் பாதிக்கப்பட்ட விமான சேவை… ஒரே வாரத்தில் 4,300 விமானங்கள் ரத்து!!
உலகெங்கும் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் நிலையில் ஒமைக்ரான் பீதியால் கடந்த ஒரு வாரத்தில் 4,300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உலகெங்கும் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் நிலையில் ஒமைக்ரான் பீதியால் கடந்த ஒரு வாரத்தில் 4,300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 415 ஆக அதிகரித்துள்ளதால் மாநில அரசுகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு விமான நிறுவனங்களும் கிறிஸ்துமஸ் சிறப்பு விமான சேவையை ஒவ்வொரு ஆண்டும் இயக்கும். இந்தாண்டு உலகளவில் 108க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால் பயண கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு 1 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த தொற்று பாதித்து இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் விமானக் கண்காணிப்பு இணையதளமான www.FlightAware.com வெளியிட்ட புள்ளி விபரத்தின்படி, உலகளவில் குறைந்தபட்சம் 2,314 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் வார விடுமுறை இறுதி நாட்களில் செல்வதற்காக இயக்கப்படும் சிறப்பு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், இந்த வாரம் மட்டும் 4,300க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்தன. நேற்று மட்டும் திட்டமிடப்பட்டிருந்த மேலும் 340 விமானங்கள் ரத்தாகின.
உலகளவில் மேலும் 1,404 கிறிஸ்துமஸ் தின சிறப்பு விமான சேவைகள் நிறுத்தப்பட்டதாக அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் ரத்து செய்யப்பட்ட அனைத்து விமானங்களும், அமெரிக்காவிற்குள்ளும் அல்லது வெளிநாட்டிற்கு வெளியேயும் சுமார் நான்கில் ஒரு பங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. உலகளவில் மேலும் 9,000 விமானங்கள் தாமதமாக அந்தந்த விமான நிலையங்களுக்கு சென்றடைந்தன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,650 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 374 பேர் தொற்று பாதித்த நிலையில் இறந்தனர். ெமாத்த பாதிப்பு எண்ணிக்கை 3,47,72,626 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 4,79,133 ஆகவும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 17 மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளது. 117 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராட்டிராவில் 88 பேர், டெல்லியில் 64 பேர், தெலங்கானாவில் 24 பேர், ராஜஸ்தானில் 21 பேர், கர்நாடகாவில் 19 பேர், கேரளாவில் 15 பேர், குஜராத்தில் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்த மாநில அரசுகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. ஒமைக்ரான் பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்கள் மீண்டும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளன.
டெல்லியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில், இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. மத்திய பிரதேச அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது. குஜராத் அரசு இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. அரியானா மாநிலத்தில் ஜனவரி 1, 2022 முதல் இரவு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் 6 மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.