கடல்மட்டம் உயரும் வேகம் இரட்டிப்பு: ஐ.நா. காலநிலை அறிக்கையில் எச்சரிக்கை
கடந்த 2022ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக இருந்ததால் உலகத்தில் கடல்மட்டம் உயரும் வேகம் இரட்டிப்பாகியுள்ளது என ஐநா காலநிலை அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு தொடர்ந்து ஐந்தாவது அல்லது ஆறாவது வெப்பமான ஆண்டாக அமைந்துள்ளது. சராசரியை விட சராசரியாக 1.15 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருந்தது. பசிபிக் பெருங்கடலின் பகுதியைக் குளிர்விக்கும் லா நினா நிகழ்வு மூன்றாம் ஆண்டாக ஏற்பட்டபோதும் இந்த வெப்பநிலை உயர்வு காணப்பட்டதாக ஐ.நா. அறிக்கை கூறுகிறது.
உலக வானிலை அமைப்பு (WMO) வெள்ளிக்கிழமை 'உலகளாவிய காலநிலை நிலவரம் 2022' என்ற தலைப்பில் 55 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பூமி தினத்திற்கு முன்னிட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடந்த எட்டு ஆண்டுகள் உலக அளவில் பதிவாகிய மிகவும் வெப்பமான ஆண்டுகள் என்று சொல்லப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை பல மாதங்களாக வானிலை தரவுகளை பகுப்பாய்வு செய்து தயாரிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் பல பில்லியன் டாலர்கள் இழப்பை ஏற்படுத்திய வெள்ளம், வறட்சி மற்றும் வெப்ப அலைகள் போன்ற பேரிடர்களின் தாக்கம் பற்றி கூறப்படுகிறது. உலகளாவிய கடல் வெப்பம் மற்றும் அமிலத்தன்மை உச்ச அளவை எட்டியுள்ளன என்றும் அண்டார்டிக் கடல் பனி மற்றும் ஐரோப்பிய ஆல்ப்ஸ் பனிப்பாறைகள் இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளன எனவும் ஐ.நா. அறிக்கை கவலை தெரிவிக்கிறது.
"2022ஆம் ஆண்டில், கிழக்கு ஆபிரிக்காவில் நிலவி தொடர் வறட்சி, பாகிஸ்தானில் ஏற்பட்ட வரலாறு காணாத மழைப்பொழிவு மற்றும் சீனா மற்றும் ஐரோப்பாவில் பதிவான வெப்ப அலைகள் ஆகியவை கோடிக்கணக்கான மக்களைப் பாதித்தன. உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து செல்வது அதிகரித்துள்ளது. பல கோடி டாலர்கள் மதிக்கத்தக்க இழப்புகள் நேர்ந்துள்ளன" என உலக வானிலை அமைப்பின் செயலாளர் பெட்டேரி தாலாஸ் கூறுகிறார்.
சீனாவின் வெப்ப அலையானது அந்நாட்டின் வரலாற்றிலேயே மிக வெப்பான கோடை காலமாக நீடித்தது. அதன் விளைவாக கோடையில் வெப்பம் சராசரியைவிட 0.5 டிகிரி செல்சியஸ் (0.9 டிகிரி ஃபாரன்ஹீட்) அளவுக்கு அதிகமாக சுட்டெரித்தது என்று ஐ.நா. வானிலை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஆப்பிரிக்காவின் வறட்சி சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவில் 17 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை இடம்பெயர வைத்துள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தானில் பேரழிவை உண்டாக்கிய வெள்ளத்தின்போது, அந்நாட்டின் மூன்றில் ஒரு பகுதி தண்ணீரில் தத்தளித்தது எனவும் இதனால், சுமார் 80 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்ததாகவும் ஐ.நா.வின் உலக காலநிலை நிலவர அறிக்கை குறிப்பிடுகிறது.