அமெரிக்காவின் நியூயார்க்கில் பாலத்தின் மீது கப்பல் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். 19 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து பார்ப்போம்.

Mexican ship crashes into New York Brooklyn Bridge: அமெரிக்காவின் நியூயார்க் நகரின் புரூக்ளின் பாலத்தில் மெக்சிகன் கடற்படைக்குச் சொந்தமான பயிற்சிக் கப்பல் ஒன்று மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் 19 பேர் காயமடைந்துள்ளதாக நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார். இந்த கப்பலில் 277 பயணிகள் பயணித்ததாகவும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதியதாகவும் அவர் கூறினார்.

அமெரிக்காவில் பாலத்தின் மீது மோதிய கப்பல்

இந்தச் சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நியூயார்க் நகர மேயர், "மெக்சிகன் கடற்படையின் உயரமான கப்பல் Cuauhtemoc மின்சாரம் துண்டிக்கப்பட்டு புரூக்ளின் பாலத்தில் மோதியது. கப்பலில் பயணித்த 277 பேரில் 19 பேர் காயமடைந்துள்ளனர், இதில் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். மேலும் 2 பேர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கப்பல் விபத்துக்கு காரணம் என்ன?

இது தொடர்பாக நியூயார்க் காவல்துறைத் தலைவர் வில்சன் அராம்போல்ஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், ''கேப்டன் கப்பலை இயக்கிக் கொண்டிருந்தபோது, இரவு 8:20 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் கப்பல் பாலத்தின் தூணில் மோதியது'' என்றார்.கப்பலின் பாய்மரம் பாலத்தில் மோதியதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது. Cuauhtemoc கப்பலின் பாய்மரம் பாலத்தின் அடிப்பகுதியில் மோதி உடைந்து விழுந்ததைக் காட்டும் வீடியோவை CNN வெளியிட்டுள்ளது.

மெக்சிகன் கடற்படை விளக்கம்

சுமார் 297 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்ட அகாடமி பயிற்சிக் கப்பல், புரூக்ளின் பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் சேதமடைந்ததாகவும், இதனால் அதன் பயணத்தைத் தொடர முடியாமல் போனதாகவும் மெக்சிகன் கடற்படை தெரிவித்துள்ளது. கப்பல் மோதியதால் பாலத்தில் எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை. சம்பவத்திற்குப் பிறகு சிறிது நேரம் மூடப்பட்ட பாலம் மீண்டும் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. புரூக்ளின் பாலத்தின் அனைத்துப் பாதைகளும் சம்பவத்திற்குப் பிறகு சிறிது நேரம் மூடப்பட்டன, ஆனால் இரவு 10:30 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டதாக நியூயார்க் அவசரகால அதிகாரிகள் தெரிவித்தனர்.

15 நாடுகளுக்கு செல்ல இருந்த கப்பல்

"இந்த விபத்து தொடர்பாக ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, புரூக்ளின் பாலத்தில் எந்தவிதமான கட்டமைப்பு சேதமும் இல்லை" என்று ஆடம்ஸின் செய்தித் தொடர்பாளர் ஃபேபியன் லெவி தெரிவித்தார். விபத்துக்குள்ளான மெக்சிகன் கப்பல் ஒவ்வொரு ஆண்டும் கேடட் பயிற்சியை முடிக்கப் புறப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு இந்த கப்பல் ஏப்ரல் 6 ஆம் தேதி 277 பேருடன் மெக்சிகன் துறைமுகமான அகாபுல்கோவிலிருந்து புறப்பட்டது. மேலும் கிங்ஸ்டன், ஜமைக்கா; ஹவானா, கியூபா; கோசுமெல், மெக்ஸிகோ; மற்றும் நியூயார்க் உள்ளிட்ட 15 நாடுகளில் உள்ள 22 துறைமுகங்களுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.