Russia-Ukraine Crisis: ரஷ்யா கொடூர தாக்குதல்... 198 உக்ரைன் மக்கள் உயிரிழப்பு!!
உக்ரைனில் 3 ஆம் நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் 198 பொதுமக்கள் உயிரிழந்துவிட்டுள்ளதாக உக்ரைன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உக்ரைனில் 3 ஆம் நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் 198 பொதுமக்கள் உயிரிழந்துவிட்டுள்ளதாக உக்ரைன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா நாடுகள் இடையே போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் தலைநகர் கிவ் உள்ளிட்ட பல இடங்களில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும் உக்ரைன் நாட்டிலுள்ள சில விமான நிலையங்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இந்தப் போர் காரணமாக சிவில் விமான போக்குவரத்திற்கு உக்ரைன் நாடு தடை விதித்துள்ளது.
இதன் காரணமாக அங்கு தங்கியுள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானம் ரூமேனியா மற்றும் ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்களை அனுப்பியுள்ளது. உக்ரைன் மீது 3வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தலைநகர் கீவ்வை கைப்பற்றும் நோக்கில் அந்நாட்டின் படைகள் முன்னேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், மெலிட்டோபோல் நகரை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக கூறிய ரஷிய ராணுவம், உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள நீர் அணுமின் நிலையத்தையும் கைப்பற்றியது.
மேலும் உக்ரைனில் உள்ள 211 இராணுவ உள்கட்டமைப்புகளை அழித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமும் தங்களின் அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் 8 கடற்படை கப்பல்களை தாக்கி அழித்துவிட்டதாகவும் ரஷ்ய ராணுவம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே இதுவரை 3,500க்கும் மேற்பட்ட ரஷிய படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் ராணுவம் தன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும், 102 டாங்கிகள், 536 கவச போர் வாகனங்கள், 8ஹெலிகாப்டர்கள், 14 விமானங்கள் மற்றும் 20 க்ரூஸ் ஏவுகணைகளை அழித்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.