புதிய ஆய்வு ஒன்று, எகிப்திய நாகரிகத்திற்கு முன்பே, சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன் தென்கிழக்கு ஆசியாவில் மம்மியாக்கும் முறை இருந்ததைக் கண்டறிந்துள்ளது. வேட்டையாடி உணவு சேகரிக்கும் பழங்குடியினர், உடல்களைப் புகைப்பதன் மூலம் பதப்படுத்தியுள்ளனர்.
மனித உடல்களைப் பதப்படுத்தி மம்மிக்களை உருவாக்கும் முறை, எகிப்திய மற்றும் தென் அமெரிக்க நாகரிகங்களுக்கு முன்பே, சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்னரே தென்கிழக்கு ஆசியாவில் வழக்கத்தில் இருந்ததை புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
"புரோசிடிங்ஸ் ஆஃப் தி நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சஸ்" இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, வேட்டையாடி உணவு சேகரிக்கும் பழங்குடி சமூகத்தினர், மனித உடல்களைப் புகைப்பதன் மூலம் பதப்படுத்தி மம்மிக்களை உருவாக்கியுள்ளனர்.
புகை மம்மிகள்
இந்த பண்டைய "புகை மம்மிகள்", வியட்நாம், தெற்கு சீனா, மற்றும் இந்தோனேசியாவில் உள்ள அகழ்வாராய்ச்சிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளன. எலும்புகள் குறைந்த வெப்பத்திற்கு உட்படுத்தப்பட்டதற்கான அறிவியல் ஆதாரங்கள், இந்த பண்டைய நடைமுறையை உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த மம்மியாக்கும் முறை, நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பழங்குடி சமூகங்களில் இன்றும் நடைமுறையில் உள்ளது. இது, மனித குலத்தின் ஆழமான அன்பு மற்றும் ஆன்மீக நம்பிக்கையின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுகிறது.
மம்மிக்களை உருவாக்கும் முறை
இந்த மம்மியாக்கும் முறைக்கு, இறந்த உடலின் எலும்புகள் இறுக்கமாக வளைந்த நிலையில் அல்லது உட்கார்ந்த நிலையில் இருப்பது ஒரு முக்கிய அடையாளமாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலை, இறந்தவர்கள் முழுவதுமாகப் புதைக்கப்படாமல், நீண்ட காலத்திற்குப் பராமரிக்கப்பட்டிருக்கலாம் என்பதை உணர்த்துகிறது.
இந்த பழமையான சடங்கு, பல்லாயிரம் ஆண்டுகளாக நீடித்திருப்பதோடு, கிழக்கு ஆசியா முழுவதும் பரவியிருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்த கண்டுபிடிப்பு, பண்டைய மனிதர்களின் வாழ்வியல் மற்றும் மரணத்திற்குப் பிந்தைய நம்பிக்கைகள் குறித்த புதிய தகவல்களை அளித்துள்ளது.
