வரலாறு காணாத கனமழை; வெள்ளத்தில் மிதக்கும் ஜப்பான்...உயிரிழப்பு 100-ஆக உயர்வு
வரலாறு காணாத மழையால் ஜப்பான் வெள்ள நீரில் மிதக்கிறது. ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதிகளில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 100-க்கம் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி மாயமாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மிக அதிகபட்சமாக ஹிரோஷிமாவில் 40-க்கும் அதிகமானோர் மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அங்கு மழை வெளுத்து வாங்கி வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஹிரோஷிமா பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அங்கு கடுமையான பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது. மீட்பு பணியில் 40-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.