தினமும் 15 லட்சம் கொரோனா கேஸ்கள்... திணறும் பிரிட்டன்... ஐ.நா. பொது செயலாளர் எச்சரிக்கை..!
உலகில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று ஆரம்பித்ததில் இருந்து, பல நாடுகளில் இம்முறை இறப்பு சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
உலகில் சராசரியாக ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை புதிய கொரோனாவைரஸ் திரிபு உருவாகி வருகிறது. இந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று ஆசியாவில் மிக வேகமாக பரவி வருவதாக ஐ.நா. பொது செயலாளர் அண்டோனியோ கட்ரெஸ் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.
மேலும், உலகம் முழுக்க முடிந்த வரை அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்க அரசாங்கங்கள் மற்றும் மருந்து நிறுவனங்களிடம் அவர் கேட்டு கொண்டிருக்கிறார்.
பெருந்தொற்று முடியவில்லை:
"கொரோனா பெருந்தொற்று நிறைவுற இன்னும் வெகு தூரம் கடக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் புதிதாக 15 லட்சம் பேர் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆசியாவில் கொரோனா பெருந்தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதுதவிர ஐரோப்பாவில் புது வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. பெருந்தொற்று ஆரம்பித்ததில் இருந்து, பல நாடுகளில் இம்முறை இறப்பு சதவீதம் அதிகரித்து இருக்கிறது," என கவி கோவாக்ஸ் அட்வான்ஸ் மார்கெட் கமிட்மெண்ட் சம்மிட் 2022 நிகழ்வில் ஐ.நா. பொது செயலாளர் அண்டோனியோ கட்ரெஸ் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் எவ்வளவு வேகமாக உருமாறி, மற்றவர்களிடம் பரவும் தன்மை கொண்டிருக்கிறது என்பதை நினைவூட்டும் வேரியண்டாக ஒமிக்ரான் உள்ளது. குறிப்பாக தடுப்பூசி அதிகம் செலுத்தப்படாத பகுதிகளில் இது அதி தீவிரமாக பரவும் தன்மை கொண்டிருக்கிறது.
புது திரிபுகள்:
"இந்த ஆண்டு மத்தியில் உலகின் அனைத்து நாடுகளிலும் 70 சதவீதம் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்ற இலக்கை அடைய மேலும் நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை புது வைரஸ் தொற்று உருவாகி வருவதை அடுத்து, நேரம் மிகவும் முக்கியத் துவம் வாய்ந்தது," என அவர் தெரிவித்தார்.
பிரிட்டனில் முதல் முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் ஒமிக்ரான் வேரியண்ட் அதன் முந்தைய திரிபுகளை விட மிக வேகமாக பரவும் தன்மை கொண்டிருக்கிறது என உலக சுகாதார மையம் தெரிவித்து உள்ளது.
ஒமிக்ரான் XE வேரியண்ட்:
கொரோனா வைரஸ் தொற்றின் உருமாற்றம் அடைந்த XE வேரியண்ட் இந்த ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி பிரிட்டனில் கண்டறியப்பட்டது. அன்று முதல் இதுவரை சுமார் 600-க்கும் மேற்பட்டோர் இந்த வேரியண்ட் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் கடந்த வாரம் தெரிவித்து இருந்தது.
புதிய XE வேரியண்ட் முந்தைய BA. 2 வேரியண்டை விட பத்து மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டிருக்கிறது என இது பற்றி நடத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எனினும், இந்த வேரியண்ட் பற்றிய ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது என உலக சுகாதார மையம் தெரிவித்து இருந்தது.