‘என் ஒரு ஓட்டால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப்போகிறது என்ற பரவலான கேள்விகளால்தான் நம்மால் வெற்றிகரமான 70 சதவிகித வாக்குப்பதிவுகளைக் கூட எட்டமுடியவில்லை எனும் நிலையில், கர்நாடகா மாநிலத்தில் இரண்டு கைகளுமில்லாத மாற்றுத்திறனாளி சபிதா மோனிஸ் வாக்களித்தார்.

இரண்டாம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுவதும் இன்று நடைபெற்றுவருகிறது. இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 100 சதவிகித வாக்குப்பதிவே தேர்தல் ஆணையத்தின் லட்சியம் என்று கூறப்பட்டுவரும் நிலையில் இம்முறையும் 60 முதல் 70 சதவிகித வாக்குப்பதிவுகளே சாத்தியம் என்று தெரிகிறது. இந்த நிலையில் இரு கைகளையும் இழந்த பெண் ஒருவர் ஒரு தேர்தல் விடாமல் தொடர்ந்து வாக்களித்துவருவது வியப்பை அளிக்கிறது.

கர்நாடகா மாநிலம் மங்களூரூவில் பிறந்தவர் சபிதா மோனிஸ்(30). இவர் பிறக்கும் போதே தனது இரண்டு கைகளையும் இழந்து விட்டார். எனினும் இது அவரை சாதாரண வேலைகள் எதையும் செய்வதிலிருந்து முடக்கவில்லை. இவர் அனைத்து தடைகளையும் கடந்து தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார். அத்துடன் தனக்கு வாக்குரிமை கிடைத்த பின்பு அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் வாக்களித்து வருகிறார்.

அந்தவகையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தக்ஷின் கன்னடா பகுதியிலுள்ள பெல்தங்கடி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். ஒருவர் வாக்களித்தால் அவருக்கு கை விரலில் மை வைக்கப்படும். சபிதாவிற்கு இரண்டு கைகளும் இல்லாததால் அவருக்கு கால் விரலில் மை வைக்கப்பட்டது. சாதரான மக்கள் பலர் தங்களுக்கு வாக்குரிமை இருந்தும் வாக்களிக்காத நிலையில் இவர் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை செவ்வேன செய்துவருகிறார். இதன்மூலம் ஏன் வாக்களிக்க வேண்டும் என்று கேள்வி கேட்பவர்களுக்கு நல்ல விடை அளிக்கும் விதமாக இவரின் செயல் உள்ளது குறிப்பிடத்தக்கது.