உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வரும் நிலையில் இந்தியாவிலும் தற்போது அதன் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதனால் கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கை பிரதமர் மோடி அமல்படுத்தி இருக்கிறார். கல்வி நிறுவனங்கள், கடைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், பொது போக்குவரத்துக்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் இருக்கும்படி அரசு அறிவித்திருக்கிறது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கின்றனர்.

இந்த நிலையில் பொழுதுபோக்கிற்காக 24 மணி நேரமும் மக்கள் தொலைக்காட்சியையும் மொபைல் போனையுமே பார்த்தபடி இருக்கின்றனர். மேலும் பல தனியார் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவிட்டு இருக்கிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக மொபைல் டேட்டா உபயோகப்படுத்துபவர்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது. மொபைல் டேட்டாவை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு செல்போன் நிறுவனங்கள் அறிவுறுத்தி இருந்தன.

whatsapp

இதையடுத்து வாட்ஸ்அப் நிறுவனம் தனது ஸ்டேட்டஸ் வீடியோவில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்து இருக்கிறது. இதற்கு முன்பாக 30 வினாடிகள் வீடியோ வைக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 15 வினாடிகளுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது. வாட்ஸ் அப் சர்வர் தடையின்றி இயங்கவும் உள்கட்டமைப்புகளில் டிராபிக்கை குறைப்பதற்காகவும் இந்த திடீர் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அந்த நிறுவனம் சார்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் இந்நடவடிக்கை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.