OnePlus 11 Jupiter Rock மாடல் அறிமுகம்! அது என்ன ஜூப்பிட்டர் ராக்? அசத்தல் கண்டுபிடிப்பு
ஒன்பிளஸ் நிறுவனத்தின் 11 சீரிஸ் வரிசையில் புதிதாக ஜூப்பிட்டர் ராக் என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இது குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
இந்தாண்டு ஒன்பிளஸ் நிறுவனத்தின் 11 சீரிஸ் மாடல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவிலும், உலக சந்தைகளிலும் சில சில மாற்றங்களுடன், வெவ்வேறு மாடல்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், சீனாவில் தற்போது சிறப்பு ஸ்மார்ட்போனாக OnePlus 11 Jupiter Rock என்ற மாடலை ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
OnePlus 11 சீரிஸின் இந்த சிறப்பு மாடல் ‘ஜூபிடரை’ அடிப்படையாகக் கொண்டது என்றும், '3D மைக்ரோ கிரிஸ்டலின் ராக்' என்ற பொருளில் இருந்து உருவாக்கப்பட்ட முதல் ஸ்மார்ட்போன் என்றும் ஒன்பிளஸ் கூறுகிறது. மாடலின் பெயரில் குறிப்பிடுவது போல, ஜூபிடர் ராக் பதிப்பானது, சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான ஜூப்பிட்டரில் (வியாழன் கிரகம்) இருந்து ஈர்ப்பைப் பெற்றது பெற்றது. மேலும், இது OnePlus 11 போனானது கருப்பு, பச்சை நிறத்தில் வந்த நிலையில், தற்போது வெளிவந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் மூன்றாவது வண்ண நிற மாடலாகும்.
OnePlus 11 'ஜூபிடர் எடிஷனின்' சிறப்பு என்ன?
சில டெக் இணையதளங்களில் வெளிவந்துள்ள தகவலின்படி, '3D மைக்ரோ கிரிஸ்டலின் ராக்' என்று கூறப்படும் ஒரு பொருளைப் பயன்படுத்தி ஜூபிடர் ராக் ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒன்பிளஸ் நிறுவனம் கூறுகையில், இவ்வாறு '3D மைக்ரோ கிரிஸ்டலின் ராக்' என்ற பொருளிலிருந்து வரும் முதல் ஸ்மார்ட்போன் இதுதான் என்று கூறுகிறது.
மேலும் இது ஜூபிடர் ராக்கின் ஒவ்வொரு யூனிட்டிலும் பின் பேனலாக மாறுவதற்கு முன்பு அந்த பொருள் பலகட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. சுமார் 12 மாதங்களுக்கும் மேலாக இந்தச் செயல்முறை நீடித்ததாகவும் ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
OnePlus 11 Jupiter Rock: அம்சங்கள்
இதன் வடிவமைப்பு பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. இருந்தபோதிலும், OnePlus 11 சீரிஸில் இந்த வேரியண்டானது இரண்டு வழக்கமான மாடல்களைப் போன்ற அம்சங்களை தான் கொண்டுள்ளது. அதாவது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் பிராசசர் 2 மூலம் இயக்கப்படுகிறது.
16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி உள்ளன. 6.7-இன்ச் QHD+AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, 5,000 mAh சக்தி கொண்ட பேட்டரி, அதற்கு ஏற்ப 100 W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளன. முன்புறத்தில் 16 எம்பி செல்ஃபி கேமராவும், பின்புறத்தில் 50 எம்பி பிரைமரி லென்ஸ், 48 எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 32 எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் கேமராவும் உள்ளன.