வெறும் 11 ரூபாய்க்கு ஐபோன் 13 வாங்கிய 3 பேர்! பிளிப்கார்ட் சொல்வது நிஜமா?
பல பிளிப்கார்ட் பயனர்கள் தங்கள் ஏமாற்றத்தைப் பிரதிபலிக்கும் விதமாக எக்ஸில் பதிவிட்டுள்ளனர். இது 'மார்க்கெட்டிங் வித்தை', 'மிகப்பெரிய மோசடி', 'பயனர்களுக்கு இழைக்கும் அநீதி' என்று பலர் கடுமையாக சாடியுள்ளனர்.
பிளிப்கார்ட் (Flipkart) நிறுவனம் ஆப்பிள் ஐபோன் 13 ஸ்மார்ட்போன் ரூ.11க்கு கிடைப்பதாக விளம்பரப்படுத்தியது பயனர்களின் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது.
பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் ஒரு பகுதியாக, பிளிப்கார்ட் அதன் ‘Fastest Fingers First’ சலுகையின் கீழ் iPhone 13 ஸ்மார்ட்போனை இரவு 11 மணிக்கு வெறும் 11 ரூபாய் விலைக்கு வாங்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி ஐபோனை வாங்கக் காத்திருந்த பலர் சில நிமிடங்களில் ‘Out of stock’, ‘Sold out’ என்ற செய்தி திரையில் தோன்றியதைப் பார்த்து ஏமாற்றமும் விரக்தியும் அடைந்தனர்.
சிலர் ஐபோன் 13 ஸ்மார்ட்போன் சில நிமிடங்களுக்கு மட்டும் 11 ரூபாய்க்கு விற்பனைக்கு இருந்தது. பதிவு செய்த ஆர்டர் பின்னர் பிளிப்கார்ட் நிறுவனத்தாலேயே ரத்து செய்யப்பட்டுவிட்டது என்றும் கூறுகின்றனர். இன்னும் சிலர் ஆர்டர் செய்யும்போது தொழில்நுட்பக் கோளாறுகளை எதிர்கொண்டதாகச் சொல்கின்றனர்.
பல பிளிப்கார்ட் பயனர்கள் தங்கள் ஏமாற்றத்தைப் பிரதிபலிக்கும் விதமாக எக்ஸில் பதிவிட்டுள்ளனர். இது 'மார்க்கெட்டிங் வித்தை', 'மிகப்பெரிய மோசடி', 'பயனர்களுக்கு இழைக்கும் அநீதி' என்று பலர் கடுமையாக சாடியுள்ளனர்.
பயனர்களின் கருத்து:
"ஃப்ளிப்கார்ட்டில் உண்மையில் இப்படி ஒரு மோசடி நடக்கிறதா. யாரெல்லாம் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்பதை கண்டறிய விசாரணை நடத்த வேண்டும். சாமானிய மக்களுக்கு அநீதி இழைக்கக் கூடாது."
“நீங்கள் இரவு 11 மணிக்கு ஐபோன் 13 ஐ ₹11க்கு வாங்க முயற்சித்திருந்தால், ஒருவேளை நீங்கள் ஏமாற்றப்பட்டிருக்கலாம். சலசலப்பை உருவாக்க ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் பயன்படுத்தும் மார்க்கெட்டிங் வித்தைகளில் இதுவும் ஒன்று. "விற்றுத் தீர்ந்துவிட்டது"
"பிளிப்கார்ட் இதுபோன்ற மோசடிகளை செய்யும் என்று என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அவர்கள் இன்று நள்ளிரவு iPhone 13 ஐ 11 ரூபாய்க்கு வழங்கப் போவதாகச் சொன்னார்கள். நாங்கள் இரவு 7 மணி முதல் காத்திருந்தோம். ஆனால் திடீரென்று ரூ.49,900 என்றுதான் காட்டியது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. பிளிப்கார்ட் மக்களை மனரீதியாக துன்புறுத்துகிறது"
“இது உண்மையாக இருந்தால் #bigbillionsday விற்பனையின் மிகப்பெரிய ஏமாற்று வேலையாக இருக்கும். நீங்க என்ன செஞ்சு வச்சுருக்கீங்கன்னு தெரியுதா #flipkart? இது ஒரு ஜோக்காக இருக்கும் என்றுதான் இன்னும் நினைக்கிறேன்…”
பிளிப்கார்ட் பதில் என்ன?
எக்ஸ் பயனர்களில் ஒருவருக்கு பிளிப்கார்ட் பதில் அளித்துள்ளது. அதில், “இந்தச் சலுகையைப் பற்றிய உங்கள் கவலையை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ‘Fastest Fingers First’ சலுகையின் கீழ் முதல் மூன்று வாடிக்கையாளர்கள் இதனை வாங்கியுள்ளனர். ஆனால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. தற்போதைய பிக் பில்லியன் டேஸின் ஒரு பகுதியாக ஒவ்வொரு நாளும் இரவு 9 மணி மற்றும் இரவு 11 மணிக்கு பெரிய டீல்களைப் பெறலாம். உங்கள் புரிதலைப் பாராட்டுகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.