Youths who have been stunned by the tearing of Ambedkar Action picketing road
வேலூர்
வேலூரில் அம்பேத்கரின் நினைவு நாளுக்காக வைத்திருந்த பேனரில் அம்பேத்கரின் படத்தை மர்ம நபர்கள் கிழித்ததால் இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் நேற்று அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அவருடைய சிலைகள் மற்றும் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அம்பேத்கர் படங்களுடன் பல்வேறு இடங்களில் பேனர்களும் வைக்கப்பட்டிருந்தது.
அதன்படி வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறையை அடுத்த மூஞ்சூர்பட்டு காலனி பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை அருகிலும் அந்தப்பகுதி இளைஞர்கள் அம்பேத்கர் படங்களுடன் பேனர் வைத்திருந்தனர்.
இந்தப் பேனரை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் கிழித்துள்ளனர். இதனை நேற்று காலையில் அந்தப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஊர் முழுவதும் பரவியதால் இளைஞர்கள் மற்றும் மக்கள் பேனர் கிழிக்கப்பட்ட இடத்தில் திரண்டனர்.
இதனையடுத்து அவர்கள் பேனரை கிழித்தவர்களை கண்டுபிடித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் குறித்து அறிந்ததும் வேலூர் தாலுகா காவல் ஆய்வாளர் பாண்டி தலைமையில் காவலாளர்கள் விரைந்துசென்று மறியல் போராட்டம் நடத்திய மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது பேனரை கிழித்ததாக மூன்று பேர் பெயர்களை கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்தனர்.
அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவலாளார்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்துச் சென்றனர்.
இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
