youth sucide

ஆன்லைன் விளையாட்டான ப்ளூவேல் எனப்படும் கொலைகார விளையாட்டை விளையாடி பலர் இதற்கு அடிமையாக உயிரை விட்டுள்ளனர். ஆன்லைனில் விளையாடப்படும் ப்ளூவேல், தொடக்கத்தில் அளிக்கப்படும் சவால்கள் எளிதாகவே இருக்கும். ஆனால், போகப்போக சவால்கள்
கடினமாக்கப்படும். இதற்கு அடுத்ததாக, தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற இறுதி சவாலாக விடுக்கப்படும் என்கிறார்கள். அது மட்டுமல்லாது கைகளில் ரத்தத்தால் ப்ளூவேல் எனப்படும் திமிங்கலத்தன் படத்தை வரைந்து கொள்வது உள்ளிட்ட சவால்களும் இந்த விளையாட்டில் அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மதுரையில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ப்ளூவேல் விளையாடி தற்கொலைக்கு முயன்ற ஒருவரை போலீசார் காப்பாற்றியுள்ளனர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்த
ராசிபாளையத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ப்ளூவேல் விளையாட்டால், தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தேவராஜ், தனலட்சுமி தம்பதியருக்கு மோகன்ராஜ் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மோகன்ராஜ், டிப்ளமோ முடித்துவிட்டு தற்போது வீட்டில் உள்ளார். தான் தொழில் செய்வதற்காக தன் தாயாரிடம் ரூ.5 லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவரின் தாயார், தங்கையின் திருமணத்தை முடித்த பிறகு தருவதாக கூறியிருக்கிறார். 

இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் வீட்டை உள்பக்கமாக பூட்டிக் கொண்ட மோகன்ராஜ், கை, கழுத்து, தலைப்பகுதியில் மின்சார ஒயரை சுற்றிக் கொண்டு மெயின் சுவிட்ச் பாக்சில் நேரடியாக ஒயரை இணைத்து மின்சாரத்தை பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல்
அறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மோகன்ராஜ் மன உளைச்சலில் இருந்ததாகவும், ப்ளூவேல் விளையாட்டில் ஈடுபட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றனர். இதையடுத்து மோகனூர் போலீசார், மோகன்ராஜின் மொபைல் போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.