திண்டுக்கல்,
திண்டுக்கல் நோக்கி வந்துகொண்டிருந்த இரயில் படிக்கட்டில் பயணம் செய்த இளைஞர் தவறி விழுந்தபோது, கதவின் கைப்பிடியை பிடித்ததால் 1½ கிலோ மீட்டர் இரயில் இழுத்துச் சென்றது.
ஈரோடு திருநகர் காலனியைச் சேர்ந்த வைரவேல் என்பவரின் மகன் சந்தோஷ்குமார் (27). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் சொந்தமாக உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் தனது நண்பர் சுரேஷ் என்பவருடன் திருச்செந்தூர் செல்வதற்காக கோவை - நாகர்கோவில் இரயிலில் சென்றார். புதன்கிழமை நள்ளிரவு சுமார் 2 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம் காமலாபுரம் பிரிவு அருகே இரயில் சென்று கொண்டிருந்தது.
சந்தோஷ்குமார் படியில் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்த சந்தோஷ் இரயில் பெட்டியில் உள்ள கைப்பிடியை பிடித்து கொண்தால், அவரை இரயிலில் தொங்கியபடியே, தரையில் தேய்த்துக் கொண்டு செல்லப்பட்டார்.
இவர் சத்தம் போட்டு அலறியதைப் பார்த்த அவருடைய நண்பர் சுரேஷ் அபாய சங்கிலியை இழுத்து இரயிலை நிறுத்தினார். பின்னர் இறங்கி பார்த்த போது அவரை காணவில்லை. இதைத் தொடர்ந்து இரயில் புறப்பட்டுச் சென்றது.
இதுகுறித்து திண்டுக்கல் இரயில்வே காவலாளர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் அங்கு சென்று தேடி பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர் நேற்று காலை காமலாபுரம் அருகே உள்ள முட்புதரில் சந்தோஷ்குமார் படுகாயத்துடன் இருப்பதைப் பார்த்த பொதுமக்கள் காவலாளர்களுக்குத் தகவல் கொடுத்தனர்.
சுமார் 1½ கிலோ மீட்டர் இழுத்துச் சென்றதால் அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதைத் தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் இரயில்வே காவல் உதவி ஆய்வாளர் செல்வக்குமாரி வழக்குப்பதிவு செய்தும், விசாரணை நடத்தியும் வருகிறார்.
