youth protest in rk nagar

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் வரும் 12ம் தேதி நடக்கிறது. இதில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருதுகணேஷுக்கு ஆதரவு தெரிவித்து, முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்பட முக்கிய பிரதிநிதிகள் பிரச்சாரம் செய்து, தீவிர வாக்குமாக சேரித்து வருகிறார்கள்.

அதிமுக சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அனைத்து அமைச்சர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோர் தொகுதியிலேயே தங்கி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இதேபோல் ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் தொகுதியில் உள்ள அனைத்து வார்டுகளையும் தத்தெடுத்தது போல், அங்கேயே தங்கி வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இதில் மத்தியில் ஆட்சி செய்யும் பாரத ஜனதா கட்சி சார்பில், இசையமைப்பாளர் கங்கைஅமரன் பேட்டியிடுகிறார். அவருக்காக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தினமும், ஆர்.கே. நகர் தொகுதி முழுவதும் சூறாவளியாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.

மேலும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட மத்திய அமைச்சர்களும், பாஜக மூத்த நிர்வாகிகளும் ஓரிரு நாட்களில் தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

இதற்கிடையில் டெல்லியில் கடந்த 18 நாட்களாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து, மாநிலம் முழுவதும், விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆர்கே நகர் தொகுதியின் மைய பகுதியான வைத்தியநாதன் மேம்பாலம் அருகே தண்டையார்பேட்டையில் தொகுதி இளைஞர்கள் பலர், டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, இன்று காலை திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் செல்ல முடியாமல் வைத்தியநாதன் மேம்பாலத்தின் மறுபுறம் வரையும், மற்றொரு பக்கம் திருவொற்றியூர் நெடுஞ்சாலை வரையும் அணி வகுத்து நின்றன. இதையொட்டி அங்கு பரபரப்பு நிலவியது.

தகவலறிந்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். நீண்ட நேர பேச்சு வார்த்தைக்கு பின், அனைவரும் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கூறுகையில், ஆர்கே நகர் தொகுதி ஜெயலலிதாவின் தொகுதியாகும். இதனால், மாநிலம் மட்டுமல்ல நாடு முழுவதும் அனைவருக்கும் தெரியும்.

இங்கு தற்போது இடை தேர்தல் நடக்கிறது. இதற்காக மத்திய அரசை சார்ந்த அமைச்சர்களும், பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் என ஏரளமானோர் இங்கு வந்து பிரச்சாரம் செய்கின்றனர்.

இதனால், இந்த தொகுதியை மத்திய அரசு கூர்ந்து கவனித்து வருகிறது. எனவே இந்த தொகுதியில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தினால், மத்திய அரசின் கவனத்துக்கு செல்லும். இதனால், இந்த போராட்டத்தை நடத்தினோம்.

விரைவில் விவசாயிகளுக்கு உரிய நல்ல முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், இந்த போராட்டம் பெரிய அளவில் நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.