சென்னை அயனாவரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், எழும்பூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்துவருகிறார். அயனாவரம் சோலைத் தெருவை சேர்ந்த சாலமன் ராஜா, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

சாலமன் ராஜா, அயனாவரத்தில் தனது நண்பரின் வீட்டில் தங்கியிருந்து எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார். இரண்டு வருடங்களாக காதலித்துவரும் நிலையில், அண்மை காலமாக சாலமன் ராஜாவின் சில செயல்கள் பிடிக்காததால், அவற்றை மாற்றிக்கொள்ளுமாறு மாணவி கூறியுள்ளார்.

ஆனால் சாலமன் ராஜாவின் நடவடிக்கைகளில் மாற்றம் இல்லாததால், அவரை தவிர்த்து வந்துள்ளார். கல்லூரி செல்லும்போது, அவரை வழிமறித்து தன்னை தவிர்ப்பதற்கான காரணம் குறித்து கேட்டுள்ளார் சாலமன் ராஜா. உனது நடவடிக்கைகள் எனக்கு பிடிக்கவில்லை. நமக்குள் சரியாக வராது. எனவே என்னை படிக்கவிடு, தொல்லை செய்யாதே என மாணவி தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு சாலமன் ராஜாவிடம் மாணவி பேசவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சாலமன் ராஜா, இன்றும் மாணவி தன்னுடன் பேசவில்லை என்றால், கொலை செய்யும் நோக்கில் சென்று, மாணவியிடம் தன்னுடன் பேசும்படி வலியுறுத்தியுள்ளார். அதை ஏற்க மறுத்த மாணவியை கழுத்தில் பிளேடால் அறுக்க முயன்றுள்ளார். அதை மாணவி தடுக்க முயல, மாணவியில் வலதுகையில் பிளேடு அறுத்தது. நடுரோட்டில் இந்த கொடூரம் நடந்ததால், அங்கிருந்தவர்கள் கவனிக்க, சாலமன் ராஜா தப்பியோடிவிட்டார்.

மாணவிக்கு கையில் காயம்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். தப்பியோடிய சாலமன் ராஜாவை போலீசார் தேடிப்பிடித்து கைது செய்தனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. அண்மையில் சென்னை கே.கே.நகரில் மாணவி ஒருவரை அவரது காதலன் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.