Asianet News TamilAsianet News Tamil

கோவையில் 40 கிலோ கஞ்சாவுடன் அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்த இளைஞர் கைது... 

youth arrested for standing with 40 cannabis in Coimbatore
youth arrested for standing with 40 cannabis in Coimbatore
Author
First Published Apr 27, 2018, 10:33 AM IST


கோயம்புத்தூர்

ஆந்திராவில் இருந்து விற்பனைக்காக கோவைக்கு கொண்டுவரப்பட்ட 40 கிலோ கஞ்சாவுடன் அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்த இளைஞரை தனிப்படை காவலாளர்கள் கைது செய்தனர். 

கோயம்புத்தூர் மாநகரில் பீளமேடு,  இராமநாதபுரம்,  சிங்காநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து ஒரு கும்பல் கஞ்சா விற்பனை செய்து வருகிறது என்று காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அவ்வப்போது நடத்தும் சோதனைகளில் அவ்வப்போது ஒரு கிலோ, 2 கிலோ என கஞ்சா பறிமுதல் செய்யப்படுகிறது. 

இந்த நிலையில்,  கடந்த சில நாள்களுக்கு முன்னர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் 250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தும்படி மாநகர காவல் ஆணையர் கு.பெரியய்யா உத்தரவிட்டிருந்தார். 

அதன்படி துணை ஆணையர் எஸ்.லட்சுமியின் நேரடி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் பல்வேறு பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 

இதனிடையே, ராமநாதபுரம் பகுதியில் இளைஞர் சாக்குப் பையில் கஞ்சாவுடன் திருந்து கொண்டிருப்பதைக் கண்டு மக்களில் ஒருவர் தனிப்படையினருக்குத் தகவல் கொடுத்தார். இதன்படி அங்கு சென்ற காவலாளர்கள் அந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினர். 

அந்த விசாரணையில் அவர், சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலைச் சேர்ந்த பி.ராஜேஷ்குமார் (32)என்பதும்,  சாக்குப் பையில் 40 கிலோ கஞ்சா இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். 

மேலும் அவர் மீது கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திருட்டு வழக்கு மற்றும் காளையார்கோவிலில் மனைவியைக் கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது . 

இதுகுறித்து காவலாளர்கள், "ஒரு கும்பல் தேனியில் இருந்து மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து நீலாம்பூர் பகுதியில் வைத்து விற்பனை செய்து வந்தனர். ஆனால்,  தற்போது அங்கு காவல் கெடுபிடி அதிகம் உள்ளதால் முன்பு போல் தொழிலை செய்ய முடியவில்லை. 

எனவே, தற்போது வாகனத்தில்  ஆந்திரம் சென்று அங்கிருந்து  2.250 கிலோ எடை கொண்ட ஒரு பாக்கெட் கஞ்சாவை ரூ.2200-க்கு வாங்கி கோவைக்கு கொண்டு வந்து சிறு பொட்டலங்களாகப் பிரித்து ஒரு கிலோ கஞ்சாவை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையில் மாணவர்கள், இளைஞர்களுக்கு விற்பனை செய்கின்றனர். 

மேலும், மேட்டுப்பாளையம், சூலூர், வெள்ளக்கிணறு, கவுண்டம்பாளையம், பேரூர், செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறு வியாபாரிகளுக்கும் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளனர்.  

இந்த வழக்கில் தொடர்புடைய கோவையைச் சேர்ந்த பாலாஜி, ரஞ்சித் ஆகியோரைத் தனிப்படையினர் தேடி வருகின்றனர்" என்று தெரிவித்தனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios