விதி மீறலில் ஈடுபட்டவர்களிடம் அபராதம் விதித்த டிராபிக் போலீசாரை, லஞ்சம் வாங்கியதாக வாட்ஸ் ஆப்பில் வீடியோ வெளியிட்ட வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தர்மபுரி நான்கு வழிச்சாலையில் கடந்த ஒன்றாம் தேதி அன்று மாலை சுமார் 6 மணியளடிவல் போக்குவரத்து போடீலசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த மூன்று பேரை நிறுத்தி விசாரித்தனர். 

பைக்கை ஓட்டி வந்த விஜயன், ஹெல்மெட் அணியாதது குறித்தும், பைக்கில் மூன்று பேர் பயணம் செய்தது குறித்தும் போலீசர் வழக்கு பதிவு செய்தனர். அந்த இளைஞர்களிடம் இருந்து ரூ.200 அபராதம் விதித்தனர். அபராத தொகைக்கு, வசூல் செய்த பின் அதற்கான பில்லையும் அவர்களிடம் போலீசார் வழங்கினர்.

இந்த நிகழ்வை, விஜயனுடன் வந்த அவரது நண்பர் ஒருவர், தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். அந்த வீடியோவை, அன்று மாலை 6.30 மணியளவில், தருமபுரி நான்கு வழிச்சாலையில், போக்குவரத்து போலீசார் லஞ்சவேட்டையில் இறங்கியுள்ளதாக வாட்ஸ் ஆப்பில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வாட்ஸ் ஆப் பதிவு, வைரலாக பரவியது. இது குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து துணை ஆய்வாளர் சரவணன் மற்றும் தலைமைக் காவலர் தங்கம் ஆகியோர், தருமபுரி நகர காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.

இதனைத் அடுத்து, துணை ஆய்வாளர் ரத்தினகுமார் விசாரணை மேற்கொண்டதில், போலீஸார் மீது அவதூறு பரப்பிய, அரூரை அடுத்த தாமரைக் கோழியம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் சிவக்குமார் (23) என்பவரை பிடித்து விசாரித்தனர். போலீஸார் மீது அவதூறாக வாட்ஸ் ஆப்பில் தகவல் பரப்பியது சிவக்குமார் என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருடன் வந்தவர்கள் குறித்தும் சிவக்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.