Youth arrested for kidnapping Rs 26 lakhs Hawala money laundering ...
கடலூர்
ரூ. 26 இலட்சத்தை சொல்பவரிடம் ஒப்படைத்தால் 3 ஆயிரம் தருகிறேன் என்று சொன்னதை நம்பி சென்னையில் இருந்து கடலூர் வந்த அரசு சொகுசு பேருந்தில் ஹவாலா பணத்தை கடத்தி வந்த இளைஞரை காவலாளர்கள் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் நேற்று மதியம் 12.15 மணியளவில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவலாளர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அந்த சமயத்தில், சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த அரசு சொகுசு பேருந்தை காவலாளர்கள் வழிமறித்து சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பேருந்தில் வந்த இளைஞர் ஒருவரின் பையையும் காவலாளர்கள் சோதனையிட்டபோது அந்தப் பையில் ரூ.2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக் கட்டாக இருந்தன. அவை மொத்தம் ரூ.26 இலட்சம் இருந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலாளர்கள் அந்த இளைஞரையும், பணத்தையும் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதன்பேரில், காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் காவலாளர்கள் பிடிபட்ட இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் சென்னை மண்ணடியைச் சேர்ந்த பான்ஸ்பிர் மகன் காஜா (27) என்பதும், அவர் சென்னையில் செல்போன் கடையில் ஊழியராக வேலைப் பார்த்து வந்ததும் தெரிய வந்தது.
மேலும், அவரின் நண்பரான சென்னை இராயபுரத்தைச் சேர்ந்த பாரூக் என்பவர் தான் கொடுக்கும் பணத்தை மூன்று பேரிடம் கொடுத்தால் உனக்கு சம்பளமாக ரூ.3000 தருவதாக கூறியதாகவும், அதனால் ரூ.26 இலட்சத்தை அரசு சொகுசு பேருந்தில் கொண்டுவந்ததாகவும் தெரிவித்தார்.
ஆனால்,, அந்தப் பணத்திற்கான எந்தவித ஆவணமும் அவரிடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அந்த பணத்தில் கடலூர் முதுநகரைச் சேர்ந்த பெருமாள் என்பவருக்கு ரூ.5 இலட்சமும், நாகூரைச் சேர்ந்த ராஜாவுக்கு ரூ.10 இலட்சமும், காரைக்காலைச் சேர்ந்த ஜெயாலுதீனுக்கு ரூ.11 இலட்சமும் கொடுப்பதற்காக கொண்டுவந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவரை காஜாவை காவலாளர்கள் கைது செய்தனர். இதுகுறித்து துணை காவல் கண்காணிப்பாளர் நரசிம்மன், "எந்தவித ஆவணமும் இல்லாத இந்தப் பணம் ஹவாலா பணம். அதனை கடத்தி வந்த சென்னை மண்ணடியைச் சேர்ந்த காஜா கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து மொத்தம் ரூ.26 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த பணம் நாளை (அதாவது இன்று) வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்படும்" என்று தெரிவித்தார்.
