தூத்துக்குடி மாவட்டம் முத்துகிஷ்ருணாபுரத்தை சேர்ந்தவர்  மாயாண்டி.  அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி  செண்பகவள்ளி (36). இவர்களது எதிர் வீட்டில் வசிப்பவர் அம்பிகாபதி (43). கூலி தொழிலாளி. இரு குடும்பத்துக்கு இடையே  அடிக்கடி தகராறு  ஏற்பட்டு, முன் விரோதம் உள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலையில் செண்பகவள்ளி, தனது வீட்டின்  வாசலில் கோலம் போட்டு கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த அம்பிகாபதி, மறைத்து வைத்திருந்த உருட்டு கட்டையால், அவரை சரமாரியாக தலையில் அடித்தார்.

இதில் படுகாயம் அடைந்த செண்பகவள்ளி, அலறி கூச்சலிட்டபடி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். சிறிது நேரத்தில், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்து  வடபாக போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்பிகாபதியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.