மதுரையை அடுத்த மேலூரில் குழந்தை பாக்கியம் வேண்டி நாட்டு மருந்து குடித்த இளம் பெண் ஒருவர் சிறிது நேரதில் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் அந்த பெண்ணின் கணவர்தான் நிர்மலாவுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டதாக உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கல்லப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த நிர்மலா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்து  3 ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. செல்வகுமார் அடிக்கடி நிர்மலாவை அடித்து துன்புறுத்துவதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் நேற்று செல்வகுமார் தனது மனைவி நிர்மலாவை அழைத்துக் கொண்டு மேலூர் அருகே உள்ள  சேக்கிபட்டி என்ற இடத்தில் உள்ள ஒரு நாட்டு மருந்து கடைக்கு சென்றார். அங்கு குழந்தை பாக்கியத்துக்காக நிர்மலாவுக்கு நாட்டு மருந்து கொடுத்துள்ளனர். அவரும் தனக்கு குழந்தை கிடைக்கப் போகிறதே என்ற சந்தோஷத்தில் உற்சாகமாக அந்த மருந்தை வாங்கி குடித்துள்ளார்..

ஆனால் அந்த மருந்தைக்  குடித்த  சில நொடிகளில் நிர்மலா சுருண்டு விழுந்தார். இதையடுத்து அவர் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நிர்மலா நேற்று  பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து நிர்மலாவின் கணவர் செல்வகுமார்தான் அவரை விஷம் கொடுத்து கொன்று விட்டதாக உறவினர்கள் மேலுர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். குழந்தை பாக்கியத்துக்காக நாட்டு மருந்து குடித்து மேலூர் பகுதியில்  பெண்  ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.