ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த கடந்த 5 நாட்களாக தீவிரமாகப் போராடிய மாணவர்களின் நடவடிக்கையை நெகிழ்ந்த நடிகர் கமலஹாசன், “ இனிமேல் அவர்கள் மாணவர்கள் அல்ல அவர்கள் இனி ஆசிரியர்கள்'' எனத் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்ற கூறி சென்னை மெரீனா மட்டுமல்லாது மாநிலம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் கடந்த 5 நாட்களாக போராடி வந்தனர். இந்த போராட்டத்துக்கு நடிகர் கமலஹாசன் தொடக்கத்தில் இருந்தே ஆதரவு தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்த மாநிலஅரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளதையடுத்து,டுவிட்டரில் மாணவர்களுக்கு கமலஹாசன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “ ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக எனது மக்கள் தமிழகம் முழுவதும் திரண்டு எழுந்ததை நான் தொலைக்காட்சி செய்திகளில் பார்த்தேன். என் கண்களில் கண்ணீரில் மிதக்கிறது. அனைவருக்கும் நன்றி. ஜல்லிக்கட்டுக்கு போராடிய நீங்கள் மாணவர்கள் அல்ல; இனி நீங்கள் ஆசிரியர்கள். இனி நாங்கள் உங்கள் ரசிகன்'' எனத் தெரிவித்தார்.
மற்றொரு டுவிட் செய்தியில், “ இந்த உலகம் நம்மை பார்த்துக்கொண்டு இருக்கிறது. தமிழர்கள் இந்தியாவை பெருமை கொள்ளச் செய்கிறார்கள். குறிக்கோளுக்காக நீங்கள் பிடிவாதம் செய்யுங்கள். இந்த இயக்கத்தை ஆண்களும், பெண்களும் உருவாக்கி இருக்கிறீர்கள். சட்ட மறுப்பு இயக்கம் கடந்த 1930ம் ஆண்டு சென்னையில் வெற்றிகரமாக நடந்தது. அதன்பின், தமிழகத்தில் 2017ம் ஆண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டு இருக்கிறது'' எனத் தெரிவித்துள்ளார்.
