தீ விபத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. இந்த ஆண்டு கோடை காலத்தில் ஏற்படும் ஆறாவது எலெக்ட்ரிக் வாகன தீ விபத்து இது ஆகும்.
தமிழ் நாட்டில் ஒகினவா ஆட்டோடெக் டீலர்ஷிப்பில் இ ஸ்கூட்டர் ஒன்று வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக டீலர்ஷிப் முழுமையாக எரிந்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. உள்ளூர் மக்களின் உதவியோடு தீ உடனடியாக அணைக்கப்பட்டது. இந்த ஆண்டு கோடை காலத்தில் ஏற்படும் ஆறாவது எலெக்ட்ரிக் வாகன தீ விபத்து இது ஆகும்.
முன்னதாக ஏப்ரல் 16 ஆம் தேதி ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் 3 ஆயிரத்து 215 ப்ரைஸ் ப்ரோ இ ஸ்கூட்டர் மாடல்களை திரும்ப பெறுவதாக அறிவித்து இருந்தது. டீலர்ஷிப்பில் எதனால் தீ விபத்து ஏற்பட்டது என்ற காரணத்தை ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் இதுவரை அறிவிக்கவில்லை.

ரி-கால் நடவடிக்கை:
ப்ரைஸ் ப்ரோ இ ஸ்கூட்டர்களை ரி-கால் செய்யும் போது, "சமீபத்தில் அதிகரிக்கும் எலெக்ட்ரிக் வாகன தீ விபத்துக்களை அடுத்து நிறுவனத்தின் மிக முக்கிய குறிக்கோளாக இருக்கும் வாடிக்கையாளர் பாதுகாப்பை உறுதிப் படுத்திக் கொள்ளும் நோக்கில், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது," ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் தெரிவித்தது.
ரி-கால் நடவடிக்கையின் போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பேட்டரி இணைப்புகளில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறதா என்பதை சரிபார்த்து, பிரச்சினை இருப்பின் அதனை இலவசமாக சரி செய்து வழங்க ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. ரி-கால் திட்ட அறிவிப்பின் படி வாடிக்கையாளர்கள் நாடு முழுக்க இயங்கி வரும் ஒகினவா டீலர்ஷிப்களுக்கு சென்று தங்களின் வாகனங்களை இலவசமாக சரி செய்து கொள்ள முடியும்.

அடிக்கடி தீ விபத்துக்கள்:
சமீப காலங்களில் அடிக்கடி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெடித்து சிதறும் சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றன. தொடர்ந்து இ ஸ்கூட்டர்கள் தீ பிடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து பயனர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் முடிவை மாற்ற வைக்கும் வகையில் பல அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகிறது.
முன்னதாக பூனேவில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஓலா S1 ப்ரோ ஸ்கூட்டர் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதை அடுத்து தமிழ் நாட்டின் வேலூர் மாவட்டத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை மற்றும் மகள் என இருவர் உயிரிழந்தனர்.
இது மட்டும் இன்றி சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதோடு, பூனே நெடுஞ்சாலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஏற்றி சென்ற லாரி தீ பிடித்து எரிந்ததில், 20 எலெகெட்ரிக் ஸ்கூட்டர்கள் தீயில் எரிந்து நாசமாகின.
சில தினங்களுக்கு முன் சென்னையில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை மையம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததில், அதே விற்பனை மையத்தில் இருந்த 17 இ ஸ்கூட்டர்கள் எரிந்து நாசமாகின.
