Asianet News TamilAsianet News Tamil

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் பேருந்து கட்டண உயர்வை ஏற்க மாட்டார் - சொன்னது திமுகவின் செல்வகணபதி....

would not accept bus tariff hike If Jayalalithaa was alive - selvaganabathi
would not accept bus tariff hike If Jayalalithaa was alive - selvaganabathi
Author
First Published Feb 15, 2018, 9:34 AM IST


இராமநாதபுரம்

ஜெயலலிதா உயிரோடு இருந்தால்கூட இந்த பேருந்து கட்டண உயர்வை ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் செல்வகணபதி தெரிவித்தார்.

இராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. மற்றும் பல்வேறு கட்சிகளின் சார்பில் அ.தி.மு.க. அரசின் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து இராமநாதபுரம் அரண்மனை முன்பு கண்டன பொதுக்கூட்டம் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் திவாகரன் தலைமை வகித்தார். காங்கிரசு மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் குணா, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் காசிநாததுரை, சமத்துவ மக்கள் கழக மாவட்ட தலைவர் அப்துல்ஹமீது உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதில், நகர செயலாளர் கார்மேகம் வரவேற்று பேசினார். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான சுப.தங்கவேலன், முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு மாநில நிர்வாக குழு உறுப்பினர் கண்ணகி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இந்தக் கூட்டத்தில், தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர, முன்னாள் அமைச்சர் செல்வகணபதி பங்கேற்று பேசினார். அவர், "ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தி.மு.க. மக்களுக்காக போராடி வருகிறது.

பேருந்து கட்டண உயர்விற்கு நாட்டு மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், அரசு செவிமடுக்கவில்லை. இரக்கமற்ற முறையில் 100 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த உயர்வு மக்களால் தாங்க முடியாத அளவிற்கு உள்ளது.

பதவி ஒன்றையே குறிக்கோளாக வைத்து அ.தி.மு.க. அரசு ஆட்சி செய்து வருகிறது. மக்கள் நலனை சிறிதும் நினைக்கவில்லை.

தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் உள்ளிட்ட மக்கள் நல திட்டங்களை கூட சரியாக செயல்படுத்தாமல் மக்களை வாட்டிவதைக்கின்றனர்.

ஜெயலலிதா உயிரோடு இருந்தால்கூட இந்த பேருந்து கட்டண உயர்வை ஏற்றுக் கொள்ளமாட்டார். போக்குவரத்து கழகத்தில் நட்டத்தை காரணம்காட்டி பேருந்து கட்டண உயர்வு என்பது ஏற்க முடியாது.

பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டர் திட்டம், சத்துணவு ஆயா பணி, பல்கலை கழக துணைவேந்தர் பணி, கல்லூரி விரிவுரையாளர் பணி என அனைத்திற்கும் விலை நிர்ணயித்து கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.

அரசு பணி நியமனங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். துணைவேந்தர் பதவிகள் கோடிக்கணக்கில் ஏலம் விடப்படுகிறது.

நீட் தேர்வு உள்ளிட்ட எதையும் தமிழக அரசு எதிர்க்கவில்லை. பேருந்து கட்டணத்தினை குறைப்பதற்காக தி.மு.க. அளித்துள்ள பரிந்துரைகளை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தினாலே நட்டத்தினை குறைக்க முடியும்.

தமிழகத்தின் ஜீவாதார உரிமையை மத்திய அரசு காலில் போட்டு மிதிக்கிறது. அதனை 50 அ.தி.மு.க. எம்.பிக்களும் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் சிறு வணிகர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகிறார்கள். பணக்காரர்கள் வங்கிகளில் பணத்தை பெற்று திரும்ப செலுத்தாததால் ஏழைகள் நசுக்கப்பட்டு வருகிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல், தலைமை செயற்குழு உறுப்பினர் அகமதுதம்பி,  மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பாரகு, முன்னாள் கவுன்சிலர் ஐயனார் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தின் இறுதியில் ஜெகநாதன் நன்றித் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios