workers union Give up the fight and return to work

போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப தயார் எனவும் ஆனால் அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 7 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அதனால் பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். நேற்று குடும்பத்தினருடன் போக்குவரத்துதுறை அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள், இன்று தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 7 நாட்களாக நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் போக்குவரத்து முடங்கியுள்ளது. 

பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், நிலைமையை சமாளிக்க அரசு தற்காலிக ஊழியர்களை நியமித்து அரசுப் பேருந்துகளை இயக்கி வருகிறது.

அரசு, தொழிற்சங்கங்கள் என இரு தரப்பினரும் பிடிவாதமாக இருப்பதால் போராட்டம் முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார், கோவிந்தராஜ் அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது.

அப்போது, போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப தயார் எனவும் ஆனால் அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.