Workers strike for 11th day asking hike Rs. 5 crore fabric product damage

திருநெல்வேலி

திருநெல்வேலியில் 60 சதவீதம் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் 11-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தால் ரூ.5 கோடி துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் நகரில் முக்கிய தொழில் விசைத்தறி தொழில். இங்கு 5000-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன. இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு நாள் ஒன்றுக்கு ரூ.40 இலட்சம் மதிப்பிலான துணி உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் விசைத்தறி தொழிலாளர்கள், "60 சதவீதம் கூலி உயர்வு, விடுமுறை சம்பளம் நாள் ஒன்றுக்கு ரூ.300 வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தி கடந்த மாதம் 30-ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம், ஆர்ப்பாட்டமும் நடத்தி வருகின்றனர். 

நேற்று 11-வது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நடந்தது. இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் ரூ.5 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை சாலை மறியலில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து காவல்துறையினர், சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் விசைத்தறி உரிமையாளர்களை அழைத்து சமாதான கூட்டம் நடத்தி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்று கூறியதன்பேரில் நேற்று நடைபெறுவதாக இருந்த சாலை மறியல் திரும்ப பெறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விசைத்தறி தொழிலாளர்கள் ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் கோபி குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். 

மாவட்ட தலைவர் மாடசாமி, செயலாளர் ரத்தினவேலு, துணை செயலாளர் மாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வட்டார செயலாளர் அசோக்ராஜ், புளியங்குடி சிறு விசைத்தறியாளர்கள் சங்க தலைவர் வேலு, செயலாளர் பழனி, பொருளாளர் பாலசுப்பிரமணியன், சிந்தாமணி சிறு விசைத்தறியாளர்கள் சங்க தலைவர் அங்கப்பன் உள்பட விசைத்தறி தொழிலாளர்கள் திரளாக பங்கேற்றனர். 

ஊர்வலம் லட்சுமியாபுரம் 4-ம் தெருவில் இருந்து தொடங்கி திருவேங்கடம் சாலை வழியாக சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் முடிவடைந்தது. 

பின்னர் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை அதிகாரி முகம்மது அப்துல்காதர் மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர் சங்கத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், இதில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே, இவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தனர்.