women struggle for asking job in Tirunelveli
திருநெல்வேலி
தேசிய ஊரக திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என்று திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் உட்கார்ந்து பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நேற்று நடைப்பெற்றது.
இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். அவர் மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இதில், சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆட்சியர் சங்கரலிங்கம், நதி நீர் இணைப்பு திட்ட உதவி ஆட்சியர் மகேசுவரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தாழையூத்து பஞ்சாயத்துக்கு உட்பட்ட மேலதாழையூத்து, வடக்கு தாழையூத்து, ஸ்ரீநகர், காமிலாநகரைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தேசிய ஊரக திட்டத்தில் வேலையை சரியாக வழங்கவேண்டும் என்று கூறி ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க ஊர்வலமாக வந்தனர்.
அவர்களை ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு நின்ற காவலாளர்கள் உள்ளே செல்ல அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல் ஆய்வாளர் பால்துரை மற்றும் காவலாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் காவலாளார்கள் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, சிலர் மட்டும் மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், "தாழையூத்து பஞ்சாயத்துக்கு உட்பட்ட மேலதாழையூத்து, வடக்கு தாழையூத்து, ஸ்ரீநகர், காமிலாநகர், பம்பு செட் பகுதி, பூந்தோட்ட தெரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 400 பேர் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம்.
இதுவரை ஆண்டிற்கு நூறு நாள் வேலை கொடுக்கப்பட்டது. தற்போது 30 நாட்கள் மட்டுமே இந்த பகுதி மக்களுக்கு வேலை கொடுத்துள்ளனர். எங்கள் பகுதியில் விவசாய வேலையும் இல்லாததால் மிகவும் சிரமப்படுகிறோம். எனவே, எங்களுக்கு வேலையை சரியாக வழங்க வேண்டும்" என்று அதில் கூறி உள்ளனர்.
