சேலம்

எடப்பாடியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக் கோரி  50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆவணிப்பேரூர்  கீழ்முகம் கிராமப் பகுதிக்கு உள்பட்ட அண்ணாநகர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு, நீர் ஏற்றும் மின்மோட்டார் பழுதாகிவிட்டது. இதனால் அப்பகுதிக்கு சரிவர குடிநீர் வழங்கப்படுவதில்லை.

கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில், தங்கள் பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் நடைபெறாததால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் இப்பகுதி மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர் என்றும் அதனை சீர்செய்யவேண்டும் என்று கோரி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த எடப்பாடி காவலாளர்கள் மற்றும் உள்ளாட்சி அலுவலர்கள், சமாதானப் பேச்சுவார்தை நடத்தி விரைவில் அந்தப் பகுதியில் சீரான குடிநீர் வழங்கப்படும் என்று கூறினர். இதனை ஏற்றுக் கொண்ட பெண்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.