கோவை,
வைரம் தயாரிக்கும் தொழிற்சாலையை இடமாற்றம் செய்வதைக் கண்டித்து தரையில் உட்கார்ந்து முழக்கங்களை எழுப்பி முற்றுகை போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டனர்.
கோவையை அடுத்த சூலூர் அருகே செயற்கை வைரம் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு அந்த தொழிற்சாலை நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தொழிற்சாலையை இடமாற்றம் செய்யப்படுவதை கண்டித்து சில நா:களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டம் செய்தனர்.
இதுகுறித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டது. அதன்பேரில் தொழிற்சாலையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும், சி.ஐ.டி.யு சங்க நிர்வாகிகளும் மருத்துவர் பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு நேற்று காலை வந்தனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் உட்கார்ந்து முழக்கங்கள் எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின்னர் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சிஐ.டி.யு. தொழிற்சங்க பிரதிநிதிகள் தொழிற்சாலை தற்போது உள்ள இடத்திலேயே இயக்குவது, இடமாற்றம் குறித்து தொழிலாளர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு காண்பது என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதன்பேரில் நிர்வாக தரப்பினர் கலந்து பேசி முடிவை அறிவிப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து வருகிற 24-ஆம் தேதிக்கு பேச்சுவார்த்தையை தள்ளி வைத்தனர். இதில், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம், பொருளாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் சங்க தலைவர் வி.பெருமாள், செயலாளர் சி.துரைசாமி, சிபிஎம் சூலூர் தாலுகா செயலாளர் ஆறுமுகம், சி.ஐ.டி.யு. மாவட்ட நிர்வாகிகள் அருணகிரிநாதன், கே.மனோகரன், ஆர்.வேலுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
