திருப்பூர் அருகே மதுக்கடையை அகற்றக் கோரி வித்தியாசமாக முறையில் போராட்டம் நடத்த முடிவு செய்த பெண்கள் ஆளுக்கொரு குவாட்டர் பாட்டில் மதுவை குடித்து போராட்டம் நடத்தினர்.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்காலைகளில் 500 மீட்டர் தூரத்துக்குள் இருந்த மதுக் கடைகளை அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து தமிழகத்தில் 3400 மதுக் கடைகள் மூடப்பட்டன. பெரும்பாலான மதுக்கடைகள் மூடப்பட்டதால் குடிமகன்கள் தவித்துப் போயினர். இந்நிலையில் மூடப்பட்ட கடைகளுக்குப் பதிலாக புதிய கடைகளை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஆனால் தமிழகம் முழுவதும் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல பகுதிகளில் மதுக் கடைகளுக்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்  நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியிலும் பெண்கள் திரளாக கூடி ஊருக்குள் வைக்க முயற்சிக்கும் மதுக்கடைகளுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இதற்காக வித்தியாசமான முறையில் போராட முடிவு செய்த அந்த பகுதி பெண்கள் மதுக்கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மது குடிக்கும் போராட்டம் நடத்தினர்.

அங்குள்ள பெண்கள் ஆளுக்கொரு குவார்ட்டர் பாட்டிலில் உள்ள மதுவை குடித்து போராட்டம் செய்ததால் போராட்டத்தை கலைக்க முயற்சித்த காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதே போன்று வேதாரண்யம் அருகில் அண்ணாபேட்டையில், குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆனால், அந்த டாஸ்மாக் கடையை அகற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், கோபமடைந்த அப்பகுதி பெண்கள் அண்ணாபேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு கடையை அகற்றக் கோரி ஒப்பாரி வைத்துப் போராடினார்கள்.