தொண்டி,

திருவாடானை யூனியன் அலுவலகத்திற்கு வங்கி கணக்கு தொடங்குவதற்காக, கொட்டும் மழையையும் பாராது காத்திருந்த பெண்கள் சரியான தகவல் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

திருவாடானை யூனியன் அலுவலகத்தில் தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் அமைப்பு சாரா மற்றும் அமைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கான ஆதார் அட்டை இணைத்தல், வங்கி கணக்கு தொடங்குதல், ரூபே கார்டு வழங்குதல் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதற்காக இந்த யூனியனை சேர்ந்த 47 ஊராட்சிகளிலும் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் காலை முதல் மழையையும் பொருட்படுத்தாமல் வந்து காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் யாரும் வரவில்லை.

இதனால் பெண்கள் யாரிடம் விவரங்களை கேட்பது எனத் தெரியாமல் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு யாரும் வழிகாட்ட முன்வரவில்லை.

மதியம் 12.30 மணிக்கு யூனியன் அலுவலக கவுன்சில் கூட்ட அரங்கிற்கு வந்த மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் குருசாமியிடம் அங்கிருந்த பெண்கள் வங்கி கணக்கு தொடங்க நாங்கள் நீண்டநேரமாக காத்திருக்கிறோம். ஆனால் யாரும் சரியான பதில் சொல்லவில்லை என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, அவர் அங்கு கூடியிருந்த கிராம பெண்களிடம் ஏற்கனவே வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள், வங்கி கணக்கு வைத்திருந்தாலும் ரூபே கார்டு வைத்திருந்தால் இங்கு இருக்க தேவையில்லை எனவும், ஜன்தன் வங்கி கணக்கு தொடங்கினால் ரூ.1 இலட்சத்துக்கு இன்சூரன்சு கிடைக்கும். அந்த கணக்கு தொடங்கி சுமார் 6 மாதம் வரை நல்ல முறையில் வங்கி கணக்கை பராமரித்தால் ரூ.5000 வரை மேல்வரைப்பற்று கிடைக்கும். வங்கி கணக்கு தொடங்கி ஏ.டி.எம். கார்டு இருப்பவர்கள் திரும்பி செல்லலாம் என்று தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்த பெண்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதன்பின்னர் மாலையில் வங்கி கணக்கு இதுவரை தொடங்காதவர்களுக்கும், வங்கி கணக்கு தொடங்கி ஏ.டி.எம். கார்டு பெறாதவர்களுக்கும் உரிய படிவங்கள் வழங்கப்பட்டன. விரைவில் ஜன்தன் வங்கி கணக்குகளை தொடங்கவும், ரூபே கார்டு பெற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. இதில் முன்னோடி வங்கி அதிகாரிகள், உதவி திட்ட அலுவலர்கள், வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் கூறியதாவது:

“திருவாடானை யூனியனில் மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்களுக்கு ஜன்தன் வங்கி கணக்கு தொடங்க உள்ளதாகவும், ரூ.5000 கடன் அளிப்பதாகவும் மகளிர் குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கட்டாயம் வரவேண்டும் என்று ஊரக வாழ்வாதார திட்ட பணியாளர்கள் தெரிவித்த தகவல் அடிப்படையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கைக்குழந்தைகளுடன் இங்கு வந்துள்ளோம். பல முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் வந்துள்ளனர். எங்களுக்கு தகவல் கூறியவர்கள் சரியான முறையில் தகவல் சொல்லாததால் வீண் அலைக்கழிப்புகளுக்கு ஆளாகி அவதியுடன் திரும்பி செல்கிறோம்” என்று அவர்கள் கூறினர்.