கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் ஆடு, மாடு மேய்க்க சென்ற பெண் காட்டு யானையால் தாக்கப்பட்டத்தில் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா அஞ்செட்டி அருகே கேரட்டி காப்புகாடு பக்கமுள்ளது ஏத்தகிணறு. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவன் மனைவி மாதம்மாள்  (58). விவசாயியான இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வந்தார். 

நேற்று காலை கெம்பகரை அருகே உள்ள தாளவாடிபள்ளம் என்ற இடத்தின் அருகில் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு காட்டு யானைகள் வந்தன. இதனை பார்த்த மாதம்மாள் அங்கிருந்து தப்ப முயன்றார். 

அப்போது, காட்டு யானை ஒன்று, மாதம்மாளை துதிக்கையால் தாக்கி வீசியது. இதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அந்த யானைகள் அங்கிருந்து சென்றுவிட்டன.

இதனிடையே அந்த வழியாக ஆடு, மாடுகளை மேய்க்க சென்றவர்கள் யானை தாக்கி மாதம்மாள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

பின்னர், இதுகுறித்து அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி, அஞ்செட்டி வனச்சரகர் தனபால் மற்றும் வனத்துறையினர், அஞ்செட்டி காவலாளர்கள் அங்கு விரைந்து சென்றனர். 

அவர்கள் யானை தாக்கி பலியான மாதம்மாளின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பலியான மாதம்மாளின் குடும்பத்திற்கு வனத்துறையினர் ஆறுதல் கூறி, அரசின் நிவாரண உதவித் தொகையை பெற்று தருவதாக தெரிவித்தனர். 

ஆடு, மாடு மேய்க்க சென்ற பெண் காட்டு யானை தாக்கி இறந்த சம்பவத்தால் அந்தப் பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.