திருச்சி

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணி வழங்க வலியுறுத்தி வீ.பெரியபட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வீ.பெரியபட்டி ஊராட்சியில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு பணி வழங்கப்படவில்லை.

பணி வழங்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியும் பணி வழங்கப்படாத நிலையில் நேற்று காலை அப்பகுதிகளைச் சேர்ந்த ஏற்கனவே அத்திட்டத்தில் வேலைப் பார்த்த பெண் தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் என்.பூலாம்பட்டியில் உள்ள வீ.பெரியபட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது, “தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் உடனடியாக பணி வழங்க வேண்டும்.

பணி நாட்களை அதிகப்படுத்துவதுடன் கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும்.

தற்போது கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில் சுமார் 2 அடி அல்லது 3 அடி மட்டுமே பள்ளம் தோண்ட முடிகிறது. ஆனால் அதை விட கூடுதலாக பள்ளம் தோண்ட அதிகாரிகள் வற்புறுத்தும் நிலை உள்ளது. ஆகவே பணிச்சுமையை குறைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்த வையம்பட்டி காவல் ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன் மற்றும் வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கோரிக்கை குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக, அவர்கள் கூறினர். அதனை ஏற்றுக்கொண்ட பெண் தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.