Women fight for against alcohol

விருதுநகர்

திருவில்லிபுத்தூரில் டாஸ்மாக் சாராயக் கடை வைத்தததால் பெண்கள் அந்த கடையை முற்றுகையிட்டு சாராய பாட்டில்களை அடித்து நொறுக்கினர். மேலும், ஒப்பாரி வைத்தும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

விருதுநகர் மாவட்டம்,, திருவில்லிபுத்தூர் - சிவகாசி பிரதான சாலையில் மல்லி கிராமத்தில் டாஸ்மாக் சாராயக் கடை பல ஆண்டுகளாக இருந்தது. உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி அந்த சாராயக் கடைக்கு பூட்டு போடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிரதானச் சாலையில் இருந்து சுமார் மூன்று கி.மீ. தூரத்தில் உள்ள மல்லிபுத்தூர் கிராமத்தில் தனியார் ஒருவரின் தொகுப்பு வீட்டில் கடை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

டாஸ்மாக் சாராயக் கடை தங்களது பகுதியில் திறந்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்களது எதிர்ப்பை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் போராட்டத்தில் இறங்கினர்.

20 பெண்கள் உள்ளிட்ட பலர் கடைக்குள் திடீரென புகுந்து சாராய பாட்டில்களை தூக்கி வீசியும், சாலையில் போட்டும் உடைத்தனர்.

இதனையடுத்து கடையின் விற்பனையாளர் கிருஷ்ணப்பேரியைச் சேர்ந்த சுந்தர்ராஜ், கடையை மூடிவிட்டு வெளியே வந்துவிட்டார். அதன்பின்பும் அவர்களது ஆவேசம் அடங்கவில்லை. சன்னல் வழியே கற்கள் மற்றும் கம்புகளை வீசி அங்கிருந்த சாராய பாட்டில்களை உடைத்தனர்.

பின்னர், கடையின் முன்பு நிர்வாகம் செத்து விட்டது என்ற வாசகம் எழுதி காலி அட்டை பெட்டிகளை வைத்து அதன் மேல் சாராய பாட்டில்களை வைத்தும் மலர்மாலை அணிவித்தும் ஒப்பாரி வைத்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

சாராயம் குடிக்க வந்த பலர் சாராயம் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் பல மணி நேரம் கடையின் அருகிலேயே காத்துக் கிடந்தனர் அவர்களில் ஒரு சிலர் அந்த கடையை அகற்ற கூடாது எனக் கூறினர்.

உடனே போராட்டக்காரரக்ளுக்கும், குடி வெறியர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் காவலாளர்கள் குடிவெறியர்களை உடனடியாக அப்புறப்படுத்தினர்.

பின்னர், காவலாளர்கள் போராட்டக்காரர்களையும் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.