சேலம் மாவட்டம் ஓமலூரில், தீபாவளி பண்டிகையை மது போதையால் கொண்டாடிய பெண்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் சாலையிலேயே அலங்கோலமாக மயங்கி விழுந்தனர்.
தீபாவளி திருநாள் நேற்று தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். இதையடுத்து வழக்கம்போல நண்பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டவுடன் மது பிரியர்கள் தீபாவளியை மதுவுடன் கொண்டாட தொடங்கிவிட்டனர்.
அந்தவகையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் மேட்டூர் சாலையில் இருக்கும் டாஸ்மாக் கடையில் மது வாங்கிய பெண்கள் மது அருந்துவிட்டு டாஸ்மாக் கடை அருகிலேயே மயங்கி விழுந்தனர். ஒரு சிலர் சாலையில் விழுந்தும், ஒரு சிலர் கடைகளின் அருகில் தள்ளாடியும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர். இதில் பெண் ஒருவரும் மது அருந்திவிட்டு தள்ளாடியது அப்பகுதி மக்களை முகம்சுளிக்க வைத்தது.
