women came to collector office with kerosene cane for suicide .
கடலூர்
கடலூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு குடும்பத்தினருடன் தீக்குளிக்க மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்த வந்த பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக ஏராளமான மக்கள் வந்திருந்தனர். ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த சில கூட்டங்களில், சிலர் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபடுவது வழக்கமாகிவிட்டது. எனவே, வருகை தரும் மக்கள் அனைவரையும் அலுவலக நுழைவு வாசலிலேயே காவலாளர்கள் தீவிர சோதனைக்கு செய்தபிறகே உள்ளே அனுமதித்தனர்.
ஆட்சியரகத்திற்கு தன்னுடைய தங்கை மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பெண் ஒருவர் வந்தார். அலுவலக நுழைவு வாசலுக்கு வந்தபோது அந்த பெண் வைத்திருந்த பையை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த புதுநகர் காவல் உதவி ஆய்வாளர் கவியரசன் மற்றும் காவலாளர்கள் வாங்கி சோதனையிட்டனர். அந்த சோதனையில் அந்த பையில் மண்ணெண்ணெய் பாட்டில் இருந்தது தெரியவந்தது. உடனே அந்த மண்ணெண்ணெய் பாட்டிலை காவலாளர்கள் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது, அவர் குறிஞ்சிப்பாடி அங்காளம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த தெய்வசிகாமணி மனைவி ஜெயராணி (50) என்று தெரிய வந்தது.
கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் அவரும், அவருடைய மகள் கிரிஜா, ஜெயராணி தங்கை தங்கம் ஆகிய மூன்று குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வந்தோம். ஆனால் அந்த வீடுகளை கோவில் நிர்வாகத்தினர் நாங்கள் இல்லாத நேரத்தில் காலி செய்துவிட்டனர், எனவே, எங்களுக்கு மாற்று இடம் கேட்டு தாசில்தாரிடம் மனு கொடுத்தபோது, அவர் அவமரியாதையாக பேசிவிட்டார்.
மேலும், குடும்பத்தோடு கடந்த நான்கு நாட்களாக தெருவோரம் வசித்து வருகின்றோம், எனவே, தங்களுக்கு மாற்று இடம் வழங்க கோரி ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக வந்தோம் என்று தெரிவித்தார்.
உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் மண்ணெண்ணெய் ஊற்றி குடும்பத்தினருடன் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுடன் வந்தோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஜெயராணியை ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக உள்ளே அனுப்பி வைத்தனர். அவர் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சென்று ஆட்சியர் தண்டபாணியிடம் மனு அளித்தார். மனுவை பெற்ற அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
