காஞ்சிபுரம்

வேலைக்குச் சென்று திரும்பும் பெண்களிடம் குடிகாரர்கள் ஆபாசமாக பேசுவதாலும், கிண்டல் செய்வதாலும் பெண்கள் சிலர் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர் என்று கூறி மொளச்சூர் பகுதியில் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் சாராயக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், திருபெரும்புதூரை அடுத்த மொளச்சூர் ஊராட்சிக்கு உள்பட்ட திருமங்கலம், கண்டிகை, பள்ள மொளச்சூர், வாசனாம்பட்டு, திருமேனிக்குப்பம் ஆகிய பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நேற்று ஆட்சியர் பா.பொன்னையாவிடம் மனு ஒன்றை அளித்தனர்:

அதில், “மொளச்சூர் ஊராட்சிக்கு உள்பட்ட எங்கள் கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். அனைவரும் தினக்கூலி மற்றும் விவசாயத் தொழிலாளர்கள்.

கடந்த மே மாதம் எங்கள் பகுதியில் டாஸ்மாக் சாராயக் கடை திறக்கப்பட்டபோது அனைவரும் ஒன்று திரண்டு போராடினோம். அதன் விளைவாக மே 6-ஆம் தேதி கடை மூடப்பட்டது. ஆனால் மீண்டும், ஜூலை 7-ஆம் தேதி எங்கள் கோரிக்கைக்கு எதிராக டாஸ்மாக் சாராயக் கடை திறக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்தப் பகுதி வழியாக அரசு மருத்துவமனைக்கு வந்துச் செல்லும் நோயாளிகள், மக்கள் மற்றும் அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு வந்துச் செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், இந்தக் கடை வழியாகத்தான் உழவர் சந்தை, அரசு மேல்நிலைப் பள்ளிக்கும் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

திருமங்கலம் - கண்டிகை சாலையில் சாராயக் கடை பார் திறந்து வைத்துள்ளனர். இதனால் மாலை வேளைகளில் வேலைக்குச் சென்று வரும் பெண்களிடம் குடிகாரர்கள் ஆபாசமாக பேசுவதும், கிண்டல் செய்வதுமாக உள்ளனர்.

குடிவெறியர்களின் தொல்லையால் சில பெண்கள் தற்கொலைக்கு கூட முயற்சி செய்துள்ளனர். எனவே, எங்கள் பகுதியில் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் சாராயக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும்” என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.