வீட்டுக்கடன் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த 2 பெண்கள் உள்பட 3பேரை போலீசார் கைது செய்த, சிறையில் அடைத்தனர்.

திருச்சி மாவட்டம் திருவானைக்கோயில் ஸ்ரீனிவாச நகரை சேர்ந்தவர் சேதுராமன். இவரது மனைவி சுமதி. கடந்த சில நாள்களுக்கு முன்பு திருச்சி தில்லைநகர் போலீசில் புகார் செய்தார்.

அதில்,“திருச்சி, புத்தூர், முத்துராஜா தெருவை சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மனைவி பரமேஸ்வரி, புத்தூரை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி கௌரிமுத்து (எ) லட்சுமி, புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரை சேர்ந்தவர் செல்வராஜ்.

மேற்கண்ட 3 பேரும் கடந்த சில மாதங்களுக்கு முன் எனக்கு அறிமுகம் ஆனார்கள். அப்போது, என்னிடம் வங்கியில் வீட்டுக்கடன் ரூ.1 கோடி பெற்றுத் தருவதாகவும், அதற்கு கமிஷன் மற்றும் பத்திரச்செலவு தொகையாக ரூ.10 லட்சம் தர வேண்டும் எனக் கூறினர்.

அவர்களை நம்பி நான், ரூ.2,26,000 கொடுத்தேன். அந்த பணத்தை பெற்று கொண்ட அவர்கள், வீட்டுக்கடன் பெற்றுத் தராமல் மோசடி செய்து வருகிறார்கள். என்னை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தரவேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

இதைதொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், மேற்கண்ட 3 பேரும், சுமதியிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.

இதையடுத்து போலீசார், பரமேஸ்வரி, கௌரிமுத்து (எ) லட்சுமி, செல்வராஜ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.