விழுப்புரம்
 
விழுப்புரத்தில், பெண்ணை கழுத்தை அறுத்தை கொன்றுவிட்டு ஆறு சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் உள்ள பெரியமாம்பட்டு கிராமத்தில் வசிப்பவர் வேல்முருகன் (31). இவர் கொத்தனாராக வேலை செய்துவருகிறார். இவருடைய மனைவி லதா(27). இத்தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். 

நேற்று மாலை லதா இதேப் பகுதியில் உள்ள தனது நிலத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தபோது ஆறு பேர் திடீரென வந்து லதா அணிந்திருந்த தங்கச்சங்கிலியைப் பறிக்க முயன்றுள்ளனர்.

இதனால் பதறிப்போன லதா 'திருடன், திருடன்' என்று கூச்சலிட்டுள்ளார். யாராவது வந்துவிடப்போகிறார்களோ என்று சத்தம் போட்ட லதாவை தங்களிடம் இருந்த கத்தியால் கழுத்தை அறுத்துள்ளனர் அந்த மர்ம நபர்கள். மேலும், லதாவின் கழுத்தில் இருந்த ஆறு சவரன் சங்கிலியையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிவிட்டனர். 

இதனிடையே வயலுக்குச் சென்ற மருமகளை இரவு நீண்ட நேரமாகியும் காணவில்லையே என்று அவருடைய மாமனார் தாரங்கபாணி லதாவை தேடி வயலுக்கு வந்தார். அங்கு நிலத்தில் கழுத்து அறுக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்த லதாவைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தாரங்கபாணி, லதாவை மீட்டு சிகிச்சைக்காக தியாகதுருகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு லதா கொண்டுச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த லதாவின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பெரியமாம்பட்டு பேருந்து நிறுத்தத்தில் திரண்டு லதாவை கொன்றவர்களை கைது செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டு லதாவின் உடலுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்து போராட்டம் நடக்கும் இடமான சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலைகு வந்த தியாகதுருகம் காவலாளர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது உள்ளூரைச் சேர்ந்த நபர்கள்தான் லதாவை கொன்றிருக்க வேண்டும் என்றும் லதாவை கொலை செய்தவர்களை கைது செய்யும் வரை போராட்டத்தை தொடருவோம் என்றும் திட்டவட்டமாகக் கூறினர்.

பின்னர் காவலாளர்கள், "இச்சம்பவம் தொடர்பாக இருவரை கைது செய்துள்ளோம். மற்றவர்களை உடனடியாக கைது செய்து விடுவோம். எனவே, நீங்கள் மறியலை கைவிடுங்கள்" என்று வலியுறுத்தினர். 

இதனையேற்று மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்துச் சென்றனர்.  இந்த போராட்டத்தால் ஒரு  மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

பெண்ணை கழுத்தை அறுத்தை கொன்றுவிட்டு நகை பறித்த சம்பவம் இந்தப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.