திருச்சி பெண்கள் சிறை வார்டன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவரது காதலன் வெற்றிவேல் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

கடலூர் மாவட்டம் பெரியகாட்டுபாளையத்தை சேர்ந்தவர் செல்லமுத்து. இவரது மகள் செந்தமிழ்செல்வி (23). திருச்சி காந்தி மார்க்கெட் மகளிர் தனி கிளை சிறையில் 2-ம் நிலை வார்டன். சுப்ரமணியபுரம் சிறை காவலர் குடியிருப்பில் வசித்து வந்த இவர் கடந்த 3ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசார் நடத்திய விசாரணையில், செந்தமிழ்செல்விக்கு பயிற்சியின்போது அரியலூர் மாவட்டம் திருமானூரை சேர்ந்த வெற்றிவேல்(24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்துள்ளனர். 

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். வெற்றிவேல் திருச்சி மத்திய சிறையில் வார்டனாக உள்ளார். இது தெரிந்து அதே சிறையில் வார்டனாக உள்ள வெற்றிவேலின் அண்ணன் கைலாஷ் மற்றும் அவரது மனைவி மகளிர் சிறை வார்டன்  ராஜசுந்தரி ஆகியோர் செந்தமிழ்செல்வியை தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர். மேலும் ஜாதி பெயரை கூறி திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த செந்தமிழ்செல்வி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

இதையடுத்து சிறை வார்டன்கள் கைலாஷ், அவரது மனைவி ராஜசுந்தரி, காதலன் வெற்றிவேல் ஆகிய 3 பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு  பதிந்து தேடி வந்தனர். இந்நிலையில் நண்பரின் வீட்டில் பதுங்கியிருந்த காதலன் வெற்றிவேலை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்து வரும் அவரது அண்ணன், அண்ணி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.