கணவன் கண் முன்பே மனைவியை கொடூரமாக அடித்து கொலை சம்பவம் சென்னை வடபழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்மங்கள் நிறைந்த கொடூரக் கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்தனர்.

காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகணேஷ். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஞானபிரியா என்பவரை காதலித்து திருமணம்  செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு பாலகணேஷ் சென்னை வடபழனியில் உள்ள சிவன் கோயிலில் தற்காலிக குருக்களாக இருக்கிறார். 

வடபழனி தெற்கு சிவன் கோயில் தெருவில் கடந்த மூன்று ஆண்டுகளாக வாடகை வீட்டில் கணவன்  மனைவி அவர் வசித்து வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை. கோயிலுக்கு வரும் பக்தர்கள் தரும் தட்சணை பணம் வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 6 மணிக்கு வீட்டின் உரிமையாளர் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது பாலகணேஷ் கை கால்கள்  துணியால் கட்டப்பட்ட நிலையில் அரை நிர்வாணமாக கழிவறையில் கிடந்தார். இதை பார்த்த விஜயலட்சுமி அதிர்ச்சியடைந்து பாலகணேஷ் மனைவி  ஞானபிரியாவுக்கு சொல்ல அந்த வீட்டின் கதவை திறக்க முயன்றார். அப்போது கதவு முன்பக்கம் மூடப்பட்டிருந்தது. உடனே பதற்றத்தில்  விஜயலட்சமி கதவை திறந்து உள்ளே பார்த்த போது, படுக்கை அறையில் ரத்த வெள்ளத்தில் ஞானபிரியாவும் கை மற்றும் கால்கள் கயிறால்  கட்டப்பட்ட நிலையில் தலையில் காயங்களுடன் கிடந்தார்.

இதுகுறித்து உரிமையாளர் உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அதன்படி வடபழனி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து  வந்தனர். 108 ஆம்புலன்சில் வந்த மருத்துவ குழுவினர் ஞானபிரியா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் உயிருக்கு ஆபத்தான  நிலையில் கழிவறையில் கிடந்த பாலகணேசை மீட்டு சிகிச்சைக்காக ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஞானபிரியாவின் உடலை போலீசார் மீட்டு பிரேத  பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வீடு முழுவதும் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்பநாய் சிவன் கோயில்  தெரு முனை வரை ஓடி நின்றது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில்,  தம்பதி தனியாக வசித்து வருவதை தெரிந்த நபர்கள்  தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்க முடியும். மர்ம நபர்கள் வீட்டின் கதவை தட்டிய போது பாலகணேஷ் கதவை திறந்துள்ளார். அப்போது  அதிரடியாக உள்ளே புகுந்த கும்பல் பாலகணேசை துணியால் கை மற்றும் கால்களை கட்டி விட்டு அவரது மனைவி ஞானபிரியாவை கயிற்றால் கை  மற்றும் கால்களை கட்டியுள்ளனர். உடனே ஞானபிரியா திருடன் திருடன் என பலமாக சத்தம்போட்டுள்ளதாக தெரிகிறது. 

 இதனால் கொள்ளையர்கள் ஞானபிரியாவை வாயை பொத்தி அவரது தலையை தரையில் கடுமையாக மோதி மண்டையை உடைந்துள்ளனர். இதனால்  அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதன்பிறகு அவரது கழுத்தில் இருந்த நகைகளை பறித்துள்ளனர். அப்போது காதல் மனைவியை  கண்முன்பே அடித்து கொலை செய்ததை பார்த்த பாலகணேஷ் வலிப்பு ஏற்பட்டு மயங்கிவிட்டார். உடனே கொள்ளையர்கள் பால கணேஷ் இறந்து  விட்டதாக நினைத்து அவரை வீட்டில் இருந்து தூக்கி வந்து வெளியே உள்ள கழிவறையில் வீசிவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலை நகைக்காக நடந்ததாக தெரியவில்லை. காரணம் பாலகணேஷ் ரூ.3500 வாடகையில் தான் வசித்து வருகிறார்.  பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடந்து இருந்தாலும், இவர்களை பார்க்க பெற்றோர்கள் யாரும் சரியாக வரவில்லை என்றும், கணவன்  மனைவிக்கும் இடையே இதுவரை எந்த சண்டையும் ஏற்பட்டதில்லை என்றும் அருகில் வசிப்போர் தெரிவித்துள்ளனர்.

பாலகணேஷ் வடபழனி சிவன்  கோயிலில் குருக்களாக இருப்பதால் வேறு ஏதேனும் காரணமா என கோயிலில் பணியாற்றும் மற்றவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  பாலகணேஷ் தற்போதும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதால் பாலகணேஷ்  கண் விழித்து பிறகு அவரிடம் விசாரணை நடத்தினால் தான் இந்த கொடூரக் கொலைக்கான உண்மை தெரியும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இந்த  கொலையில் மர்மங்கள் பல இருப்பதால் குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் கமிஷனர் 5 தனிப்படைகள்  அமைத்து தேடிவருகின்றனர்.