Woman death in Chennai hotel

சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் பின்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் பின்லாந்தை சேர்ந்த ஹூலியா நே எமிலியா என்ற பெண், தனது காதலர் ஜோயல் சாண்டரியுடன் நேற்று இரவு தங்கியுள்ளார்.

இந்தியாவை சுற்றிப் பார்க்க டெல்லி வந்தார்கள். பின்னர் அங்கிருந்து இந்தியாவின் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கும் சென்ற அவர்கள் நேற்று காலை சென்னை வந்தனர். 

இன்று காலை எமிலியாவின் நண்பர், ஜோயல் சாண்டரி, பதற்றத்துடன் விடுதி நிர்வாகத்தினரிடம் வந்துள்ளார். அப்போது, உடன் வந்த எமிலியா மயக்க நிலையில் இருப்பதாகவும், உடனடியாக ஆம்புலன்சை அழைக்குமாறு கூறியுள்ளார்.

ஜோயல் கூறியதை அடுத்து, விடுதி நிர்வாகத்தார், 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து வரவழைத்துள்ளனர். அங்கு வந்த ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர் சோதனை செய்து எமிலியா ஏற்கனவே இறந்து போனதாக கூறியுள்ளது. 

இதன் பின்னர், விடுதி நிர்வாகத்தார், போலீசுக்கு போன் செய்தனர். அங்கு வந்த போலீசார், எமிலியாவின் காதலர் ஜோயல் சாண்டரியின் பாஸ்போர்ட், சுற்றுலா விசா மற்றும் ஆவணங்களை கைப்பற்றினர். 

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் எமிலியாவும், ஜோயலும் அதிக அளவில் போதை பொருட்கள் உட்கொண்டது தெரியவந்துள்ளது. எமிலியா இறந்தது குறித்து, டெல்லியில் உள்ள பின்லாந்து துணை தூதரகத்துக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்காக எமிலியாவின் உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சந்தேக மரணம் என்ற பிரிவின்கீழ் பதிவு செய்யப்பட்டு எமிலியாவின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எமிலியாவுக்கும் ஜோயலுக்கும் போதை மாத்திரைகள் எங்கிருந்து கிடைத்தன என்பது குறித்தும், அவை எந்த வகையான மாத்திரைகள் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.