கூடங்குளம் பகுதியில் ஆளில்லா விமானம் பறந்ததாக வெளியான தகவலையடுத்து கடலோர காவல்படையினர் மற்றும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

கூடங்குளம் அணுமின் நிலையம் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனாலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனாலும், அணுமின் நிலைய வளாகத்தில் ரஷ்ய மற்றும் இந்திய அணுசக்தி துறை நிபுணர்கள் மூலம் முகாமிட்டுள்ள நிலையில் நேற்று ஆளில்லா விமானம் அந்த பகுதியில் பறந்ததாக கூறப்பபடுகிறது. இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து கூடங்குளம் கடல் வழியே 5 கி.மீ. என்பதால் வானத்தில் பறந்த ஆளில்லா விமானம் அப்பகுதி வாசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கூடங்குளத்தில் 3 மற்றும் 4 அணுஉலை கட்டுமான பணிகள் இன்று தொடங்கப்படுகிறது. ஏற்கனவே இடிந்தகரை உள்ளிட்ட பகுதி மக்கள் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் ஆளில்லா விமானம் பறந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதை தொடர்ந்து கூடங்குளம் பகுதியில் கடலோர காவல் துறையினர் மற்றும் உள்ளூர் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.