சென்னை, வண்ணாரப்பேட்டைடியல் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு அதிகாலையிலேயே நோயாளிகள் வருகை தருகின்றனர். அதிகாலை முதலே நள்ளிரவு வரை நோயாளிகள் காத்துக் கொண்டிருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இது இன்று நேற்று அல்ல.

கடந்த 40 ஆண்டு காலமாகவே இந்த மருத்துவமனைக்கு இப்படிதான் மக்கள் வந்து செல்கின்றனர். இதற்கு காரணம் என்றால், மருத்துவர் ஜெயச்சந்திரனின் மனிதநேயமே காரணம் என்கின்றனர் அப்பகுதி மக்கள். அது மட்டுமல்ல இவரை மக்கள் மருத்துவர் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

டாக்டர் ஜெயசந்திரன் (68), வண்ணாரப்பேட்டையில் கடந்த 40 ஆண்டுகாலமாக ஏழை எளியவர்களுக்கு இலவச மருத்துவம் பார்த்து வருகிறார். இது குறித்து டாக்டர் ஜெயசந்திரன் கூறும்போது, படிப்பறிவு இல்லாத கிராமத்தில் பிறந்து, ஊர் மக்களின் ஏழ்மை நிலையை தெரிந்து, மருத்துவ வசதியின்மையால் அவர்கள் படும் துன்பத்தை பார்க்கும்போது, அவர்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் 5 ஆவது, 6 ஆவது படிக்கும் காலத்திலேயே எனக்கு ஏற்பட்டது என்கிறார்.

மருத்துவம் என்று வந்தபிறகு மக்கள் சேவைதான் முக்கியம். இது எனக்கு புனிதமான தொழில். இறைவனால் கொடுக்கப்பட்டது. அதனை ஒழுங்காக செய்ய வேண்டும் என்பதே என்கிறார் டாக்டர் ஜெயசந்திரன். என்னிடம் ஆசை என்ன வென்றால், நான் மருத்துவம் செய்து கொண்டிருக்கும்போதே என் உயிர் பிரிய வேண்டும் என்கிறார் அவர்.

தன்னிடம் சிகிச்சைக்கு வருபவர்களிடம் டாக்டர் ஜெயசந்திரன் இலவசமாகவே மருத்துவம் பார்த்து வந்துள்ளார். அப்படி விரும்பி கொடுப்பவர்களிடமும் மிக மிக குறைந்த அளவே கட்டணம் பெற்று வருகிறார். டாக்டர் ஜெயச்சந்திரன் குறித்து, சிகிச்சைக்கு வந்த பெண் ஒருவர் பேசும்போது, இவரை குல தெய்வம் என்றே குறிப்பிடுகின்றார். மற்ற மருத்துவர்களின் ஒவ்வொரு டெஸ்ட்டுக்கும் ஒவ்வொரு முறை கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆனால், இவரிடம் எந்தவொரு டெஸ்ட்டுக்கும் கட்டணம் வசூல் செய்வதில்லை. மனசாட்சிப்படி நாங்கள் கொடுக்கும் பணத்தைப் பெற்றுக் கொள்கிறார். மருந்து, மாத்திரை எல்லாம் வெளியில் இருந்து வரவழைத்துக் கொடுக்கிறார். எங்களுக்கு குலதெய்வம்தான் என்கிறார்.

தற்போது சில மருத்துவமனைகள், 50 ஆயிரம் வேண்டும், ஒரு லட்சம் வேண்டும் என்று நோயாளிகளிடம் கேட்கும் இந்த காலகட்டத்தில், கையில் காசில்லாமல் வரும் நோயாளிக்கு சிகிச்சை அளித்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து, அவர் கையில் பணம் இல்லை என்றால், பாக்கெட்டில் பணம் வைத்தும், ஆட்டோவுக்கு பணம் கொடுத்து இவர் அனுப்புகிறார்.

இவரை நாங்கள் எப்படி பார்க்க முடியும்? கடவுளாகத்தான் பார்க்க முடியும் என்று சிகிச்சை பெற வந்த பெண் ஒருவர் கூறுகிறார். மருத்துவ தொழிலை, மக்களுக்கு செய்யும் மகத்தான தொண்டாய் பார்ப்பவர்களில் டாக்டர் ஜெயச்சந்திரனும் ஒருவர்.