Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாட்டில் இந்தி அமலாக்க செல் கலைக்கப்படுமா? நியூ இந்தியா அஷ்யூரன்ஸுக்கு சு.வெங்கடேசன் கேள்வி!

தமிழ்நாட்டில் இந்தி அமலாக்க செல் கலைக்கப்படுமா என நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்துக்கு மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்

Will Hindi Enforcement Cell be disbanded in Tamil Nadu su venkatesan question to new india assurance
Author
First Published Jun 13, 2023, 10:54 AM IST

அரசு பொதுத்துறை நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் அலுவலக பயன்பாட்டில் 100% இந்தி மொழியை பயன்டுத்துவது தொடர்பாக அண்மையில் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. நியு இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் மண்டல அலுவலகங்களில் இருந்து தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்படும் அறிக்கைகள் இந்தியில் தான் இருக்க வேண்டும். அவற்றுக்கு தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படும் பதில்களும் இந்தியில் தான் இருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், அன்றாடப் பணிகளில் தொடங்கி அலுவலக இதழ் வரை அனைத்தும் இந்தியில் தான் இருக்க வேண்டும் என்றும் நியு இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு அதன் தலைமை அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அடுத்த எம்ஜிஆரா விஜய்? திரும்பும் அரசியல் பார்வை!

நியு இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் இந்தி திணிப்புக்கு மாநிலம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, அனைத்து மாநில மொழிகளையும் மதிப்பதாக தனது சுற்றறிக்கை குறித்து நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் விளக்கம் அளித்திருந்தது.

 

 

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இந்தி அமலாக்க செல் கலைக்கப்படுமா என நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்துக்கு மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எல்லா மாநில மொழிகளையும் மதிக்கிறோம் என நியு இந்தியா அஷ்யூரன்ஸ் பதில் அளித்துள்ளது. ஆனால், A 100%, B 90%, C 55% என்று மாநிலங்களை வகைப்படுத்தி இந்தி அமலாக்க இலக்கு போடும் போது இம் மூன்று வகையிலும் வராத தமிழ்நாட்டில் இந்தி அமலாக்க செல் கலைக்கப்படும் என்று உத்தரவிடுங்கள். அதுதான் அலுவல் மொழிச் சட்டம் 1 (ii) கூறுவது. இதனை பின்பற்றவில்லையென்றால் அது “ நியூ இந்தியா இன்சூரன்ஸ்” அல்ல “இந்தி இந்தியா இன்சூரன்ஸ்”” என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, “நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அநீதியானது. இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நீர்ஜா கபூர் இந்தி பேசாத மக்களையும், இந்தி பேசாத ஊழியர்களையும் அவமதித்ததுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும். எமது மண்ணில் தமிழுக்குப் பதிலாக இந்தியைத் திணிக்கும் எந்த முயற்சியையும் எதிர்ப்போம்.” என முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios