Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்து கடைகளில் பளபளபனு இருக்கும் போலி முட்டைகள்…

will be-in-stores-by-tamil-palapalapanu-fake-eggs
Author
First Published Dec 19, 2016, 11:44 AM IST


இராமநாதபுரம்,

சீன தயாரிப்பான பளபளனு இருக்கும் போலி முட்டைகள் கேரளாவில் விற்கப்பட்ட வந்த நிலையில் தமிழகத்திற்குள் இந்த முட்டைகள் நுழைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் படி இராமநாதபுரம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மனிதன் அதிகம் பயன்படுத்தும் சாதாரண பொருட்களில் தொடங்கிய போலி தயாரிப்புகள் தற்போது உணவுப் பொருட்களையும் நகலெடுக்க ஆரம்பித்துவிட்டான். அரிசியில் தொடங்கி தற்போது முட்டையில் வந்து போலி தயாரிப்புகள் நிற்கின்றன.

எந்த பொருளை மனிதன் அதிகஅளவில் விரும்பி வாங்கி பயன்படுத்துகிறானோ அதில் அதிக இலாபம் சம்பாதிக்க வேண்டும் ஒரே நோக்கில் போலிகளை தயாரித்து புழக்கத்தில் விடும் சமூகவிரோதிகள் அதிகரித்துக் கொண்டேதான் வருகின்றனர். மற்ற பொருட்களை விலக்கி வைத்து சுதாரித்து கொள்ளும் வேலையில் உணவுப்பொருட்களை அதன் தன்மை அறியாமல் வாங்கி உட்கொள்ளும் நிலை உள்ளதால் இதன்பாதிப்பு அளவற்று இருக்கிறது.

அந்த வகையில் தற்போது மனிதனை பயம் கொள்ளச் செய்துள்ள போலி தயாரிப்பு கோழி முட்டை அன்றைய காலம் தொட்டு ஊட்டச்சத்துக்காகவும், நோய் எதிர்ப்பு சக்திக்காகவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவில் விரும்பி உண்ணும் வேளையில் தற்போது கோழி முட்டையிலும் போலிகள் உருவாகி பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீன முட்டை என்ற பெயரில் பளபளப்பாக பார்த்ததும் வாங்க தூண்டும் வகையில் இந்த போலி முட்டைகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. மனிதன் விரும்பியதை அதிக பணம் கொடுத்து கூட வாங்கி சாப்பிட பயம்கொள்ளும் வகையில் ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.

தற்போது புழக்கத்தில் விடப்பட்டுள்ள சீன போலி முட்டைகளின் வெள்ளை கருவிற்கு பதிலாக ஸ்டார்ச், ரெசின், சோடியம், ஆல்கனேட் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது.

மஞ்சள் கருவிற்கு பதிலாக ஆர்கானிக் அமிலம், பொட்டாசியம், ஜெலட்டின், கால்சியம் குளோரைடு, பென்சாயிக் அமிலம் போன்றவை பயன்படுத்தப்படுகிறது. முட்டையின் நிறத்தினை பெறுவதற்காக செயற்கை நிறங்கள் பூசப்படுகின்றன.

மேலும், முட்டையின் ஓட்டு பகுதி இதற்காக வடிவமைக்கப்பட்ட அச்சுகள் மூலம் தயாரிக்கப்பட்டு அதன் மீது இயற்கையாக தெரிய வேண்டும் என்பதற்காக கோழியின் கழிவுகளை பூசி விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

சாதாரண முட்டையை விட போலி முட்டை பளபளப்பாக இருக்கம். போலி முட்டையின் ஓட்டினை கையால் தொடும்போது சற்று கரடுமுரடானதாக இருக்கும். போலி முட்டையை குலுக்கும்போது உள்பகுதியில் உருளும் சத்தம் அதிகமாக கேட்கும்.

சாதாரண முட்டையை மெதுவாக தட்டும்போது எழும் சத்தம் போலி முட்டையில் இருந்து எழும் சத்தத்தை விட அதிகமாக இருக்கும். போலி முட்டையின் ஓட்டின் அடிப்பகுதி பிளாஸ்டிக் தாளை போன்று காணப்படும்.

போலி முட்டைகளை உடைத்து பல நாட்கள் வைத்திருந்தாலும் துர்நாற்றம் வீசாது. மேலும், முட்டையை உடைக்கும்போது மஞ்சள் கரு உடையாமல் சிந்தாமல் சிதறாமல் வெளிவரும். இவ்வாறு அச்சு அசல்போன்று போலி முட்டைகள் மக்களின் உயிரை பதம்பார்க்க வந்து கொண்டிருக்கின்றன.

ஆரம்பத்தில் சாதாரண முட்டைகளை போன்று வந்து கொண்டிருந்த போலி முட்டைகள் தற்போது மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கி கொண்டிருக்கும் நாட்டுக்கோழி முட்டை வடிவிலும் போலி முட்டைகள் வந்து கொண்டிருக்கின்றன.

அண்டை நாடுகளில் இருந்து அனுப்பப்பட்டுள்ள இந்த போலி முட்டைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக புழக்கத்தில் வந்து மக்களின் உடலுக்கு தீங்கு விளைவித்து வருகிறது.

குறிப்பாக கடந்த சில மாதங்களாக கேரளாவில் இதுபோன்ற சீன முட்டைகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்திலும் இதுபோன்று போலி முட்டைகள் விற்பனை செய்யப்படுவதாக பரவிய தகவலை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக உணவுப்பாதுகாப்பு துறையினர் உணவுபாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் ஜெகதீஸ் சந்திரபோஸ் தலைமையில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

உணவுபாதுகாப்பு அலுவலர் ஜான்பீட்டர் தலைமையில் இராமநாதபுரம் பகுதியிலும் மற்ற பகுதிகளில் அந்தந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தலைமையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மாவட்டம் முழுவதும் உள்ள முட்டை மொத்த விற்பனை நிலையங்கள், சில்லறை விற்பனை நிலையங்கள், கோழிபண்ணைகள் போன்றவற்றில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து மருத்துவர் ஜெகதீஸ் சந்திரபோஸ் கூறியதாவது: “சென்னை உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவின்பேரில் கடந்த ஒருவாரமாக போலி முட்டைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையில் போலி முட்டைகள் எதுவும் இந்த பகுதியில் புழக்கத்தில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் போலி முட்டை புழக்கத்தில் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் வெளிமாநிலங்களில் இருந்து கலந்து வந்துவிடக்கூடாது என்பதற்காக தொடர் சோதனை நடத்தி வருகிறோம்” என்று அவர் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios