கடலூர்
 
கடலூரில், திருமணமாகி 13 ஆண்டுகளுக்கு பிறகு வரதட்சணை கொடுமை செய்ததால் தீக்குளித்த மனைவி அலறுவதை வேடிக்கை பார்த்த கணவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

கடலூர் மாவட்டம், நெய்வேலி பெரியாக்குறிச்சியைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம் என்பவரின் மகன் ரவிக்குமார் (47). தொழிலாளியான இவருடைய மனைவி மகாலட்சுமி (34). இவர்களுக்கு 11 வயதில் பெண் குழந்தை உள்ளது. 

இந்த நிலையில் ரவிக்குமார் திருமணமாகி 13 ஆண்டுகளுக்கு பிறகு மகாலட்சுமியை அவரது பெற்றொரிடம் உள்ள 1½ ஏக்கர் நிலத்தை தன்னுடைய பெயரில் எழுதி வாங்கி வருமாறு வற்புறுத்தி உள்ளார். 

இது தொடர்பாக 25.10.2013 அன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மகாலட்சுமி தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த மகாலட்சுமி அலறி துடித்தார். 

இவை அனைத்தையும் பக்கத்தில் இருந்து ரவிக்குமார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர மகாலட்சுமியின் காப்பாற்ற ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. 

இதனையடுத்து மகாலட்சுமியை பலத்த தீக்காயங்களுடன் அக்கம்பக்கத்தினர் மீட்டு நெய்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மகாலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

வழக்குப்பதிந்த மந்தாரக்குப்பம் காவலாளர்கள் ரவிக்குமாரை கைது செய்து கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தினர். இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி லிங்கேஸ்வரன் தீர்ப்பு கூறினார்.

அதில், "மகாலட்சுமியை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதோடு, அவரது தற்கொலைக்கு காரணமாக இருந்த ரவிக்குமாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும்" விதித்தார். 

மேளும், "அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்" என்றும் "ரூ.25 ஆயிரம் அபராத தொகையை மகாலட்சுமியின் பெண் குழந்தைக்கு இழப்பீடாக வழங்க வேண்டும்" என்றும் உத்தரவிட்டார். அதன்பின்னர், ரவிக்குமாரை காவலாளர்கள் சிறையில் அடைத்தனர்.