தேர்தல் முடியும் வரை கைது செய்ய முடியாது..! வெளியே வந்த சவுக்கு சங்கர்
பணம் கேட்டு மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் 17 வழக்குகளில் 12 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து புழல் சிறையில் இருந்து விடுதலையானார்.

பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர். இவர் சவுக்கு மீடியா என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதில், ஆளும் திமுக அரசுக்கு எதிரான விமர்சனம் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் காவல் துறை மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் சென்னை நந்தனம் பகுதியில் ஹரிச்சந்திரன் என்ற பார் உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில் கடந்த டிசம்பர் 13-ம் தேதி சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்தனர். பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் எனது மகன் சவுக்கு சங்கர் தமிழக அரசின் செயல்பாடுகளையும், முறைகேடுகளையும் விமர்சித்து வருவதால் பழிவாங்கும் விதமாக போலீசார் கைது செய்து வருகின்றனர். எனது மகனுக்கு இருதய நோயும், நீரழிவு நோயும் உள்ளது. ஆகையால் சிறப்பு மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும். ஆகையால் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், பி.தனபால் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மு.ராமமூர்த்தி, “பழிவாங்கும் நோக்கில் தொடர்ச்சியாக கைது செய்து வருகின்றனர். கடந்த டிசம்பர் 12-ம் தேதி மாலை திடீரென ஒரு தொகையை சவுக்கு சங்கரின் அலுவலகத்தில் பணிபுரியும் நபருக்கு ஜிபே மூலமாக அனுப்பிவிட்டு எப்ஐஆர் போட்டு 13-ம் தேதி யாரையோ மிரட்டியதாகக் கூறி கைது செய்துள்ளனர். அவருக்கு சிறையில் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை என வாதிட்டார்.
இதனையடுத்து தமிழக அரசு மற்றும் காவல்துறை தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டது. பின்னர் அனைத்து தரப்பு வாதங்களும் கேட்ட நீதிபதிகள் அரசை விமர்சிக்கிறார் என்பதற்காக ஒரு நபரை குறிவைத்து தொடர்ந்து கைது செய்து போலீசார் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அவரை அடுத்தடுத்து கைது செய்ய வேண்டுமென்கிற போலீசாரின் ஆர்வம் சந்தேகம் கொள்ள வைக்கிறது.
காவல்துறையின் இதுபோன்ற செய்கையால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதன்மூலம் கருத்து சுதந்திரம் மட்டுமின்றி தனிமனித சுதந்திரமும் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் தங்களது கடமையில் இருந்து ஒருபோதும் தடம் மாறக்கூடாது. எனவே,சவுக்கு சங்கரின் உடல்நிலை மற்றும் மருத்துவக்காரணங்களை கருத்தில் கொண்டு அவர் மீது தற்போது பதிவு செய்துள்ள 2 வழக்குகள் உள்பட சென்னை, காஞ்சிபுரம், திருச்சி என பல்வேறு இடங்களில் பதியப்பட்டுள்ள 17 குற்ற வழக்குகளில் அவருக்கு மார்ச் 25-ம் தேதி வரை 12 வாரங்களுக்கு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
தன்னிடம் உள்ள பாஸ்போர்ட்டை காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும். சாட்சிகளை கலைக்கும் நோக்கில் சவுக்கு சங்கர் செயல்படக்கூடாது என நீதிபதிகள் அறிவுறுத்தினார். அதாவது சுமார் 90 நாட்களுக்கு சவுக்கு சங்கரை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் நேற்று இடைக்கால ஜாமின் வழங்கியதை அடுத்து பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் புழல் சிறையில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டார்.

